அனைத்து உணவுகளிலும் தவறாமல் சேர்த்து சமைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் வெங்காயம். வெங்காயமானது அதில் உள்ள காரத்தன்மையினால் அனைவரையும் அழ வைப்பதால், இதனை செல்லமாக மாமியார் என்றும் அழைப்பார்கள். இப்படி வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான். இந்த எண்ணெய் தான் வெங்காயத்தை உரிக்கும் போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெல்லாரி/பெரிய வெங்காயம் என்று இரண்டு வகைகள் இருந்தாலும், இவை ஒரே நன்மைகளைத் தான் கொடுக்கின்றன. மேலும் வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்றவைகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த வெங்காயத்தை பல நாடுகளில் மருந்துவ பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய பங்கினை வகிக்கிறது.
இங்கு வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பாருங்களேன், அசந்து போய்விடுவீர்கள்.
பித்தம்
4-5 வெங்காயத்தை தோலுரித்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். மேலும் பித்த ஏப்பமும் மறையும்.
காது இரைச்சல்
வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
மூலக்கோளாறு
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத்தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து கலந்து, சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
கட்டிகளை எளிதில் உடைக்கும்
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து மீண்டும் இலேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வயிற்றுக் கோளாறு
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இருமல்
வெங்காய சாற்றினை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
பல் வலி, ஈறு வலி
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, பின் வெறும் வெங்காயச் சாற்றினைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
உடல் வலிமை பெற…
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
நரம்புத்தளர்ச்சி
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
ஆசனக் கடுப்பு
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
ஆண்மை பெருகும்
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும்.
சுவாசக் கோளாறு
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தைக் கசக்கி நுகர வைத்தால் மூர்ச்சை தெளியும்.
சீதபேதி
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
தூக்கம்
வெங்காய சாற்றில் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். இல்லாவிட்டால் பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
எடையை குறைக்கும்
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். மேலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும்.
செரிமானம்
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது.
இரத்த அழுத்தம்
வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இழந்த சக்தியையும் மீட்கும்.
நுரையீரல் சுத்தமாகும்
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாற்றினை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
மூட்டு வலி
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.
முகப்பரு
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
மாலைக்கண் நோய்
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்புக் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் சரியாகும்.
கண் வலி மற்றும் கண் சோர்வு
வெங்காயச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
நகச்சுத்தி
ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றைச் சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுத்தி ஏற்பட்டுள்ள விரலில் காலை, மாலை எனவே இரண்டு வேளைகளில் வைத்துக் கட்டி வந்தால் நோய் குறையும்.
நீரிழிவு
சிறிது வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், நீரழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சி
தலையில் ஆங்காங்கு முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கித் தேய்த்து வர முடி வளரும்.