குறிப்பாக `மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்த தனக்கு எந்தப் பொருள் சௌகர்யமாக இருக்கும், எது தன்னுடைய சருமத்துக்கு உகந்தது,
எந்த நாள்களில் தனக்கு ரத்தப்போகு அதிகமிருக்கும், நாப்கினை முறையாக அப்புறப்படுத்துவது எப்படி’ போன்ற அடிப்படை விஷயங்கள்கூடப் பல பெண்களுக்குத் தெரிவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், செல்லாதவர்களைவிட நான்கு மடங்கு அதிக சுகாதாரத்துடன் இருக்கின்றனர்!
`இந்தியாவில், பல ஆயிரம் பெண்களுக்கு மாதவிடாயின்போது அடிப்படை வசதிகளே கிடைக்கப்பெறுவதில்லை. இதில் எங்கிருந்து மாதவிடாய் குறித்த விழிப்புணர்வெல்லாம்..?’ என வேதனைப்படுகின்றனர் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். இந்த நிலையை, ‘பீரியட் பாவர்டி (Period Poverty)’, அதாவது ‘மாதவிடாய்க்கால வறுமை’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பீரியட் பாவர்டி
* பிறப்புறுப்பு சுகாதாரத்துக்குத் தேவையான தண்ணீர் வசதி இல்லாமை
* முறையான கழிப்பிட வசதி இல்லாமை, நாப்கினை அப்புறப்படுத்த சரியான வசதிகள் இல்லாமை
* நாப்கினே இல்லாமை. அதாவது துணி, காய்ந்த இலைகள், மண் போன்றவற்றை உபயோகப்படுத்துவது.
இவையெல்லாம் மாதவிடாய்க்கால வறுமையை உணர்த்தும் வெகு சில உதாரணங்கள்.
தேசியக் குடும்ப நல ஆய்வின் 2015 -16ம் ஆண்டு அறிக்கை, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் 62% பேர், நாப்கின் கிடைக்காததால் துணியை உபயோகப்படுத்தி வருகின்றனர் என்கிறது. பீகாரில் செய்யப்பட்ட கள ஆய்வு ஒன்றில், அங்கிருக்கும் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் மண், சாம்பல் போன்றவற்றை உபயோகிப்பது தெரியவந்துள்ளது. இப்படியான பழக்கங்களால், அங்குள்ள பெண்களில் பலருக்கும் பிறப்புறுப்பு பிரச்னைகள், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றனவாம். பிறப்புறுப்பு பிரச்னைகள் காரணமாக, பல பெண்கள் இளமையிலேயே இறந்துவிடும் அவலமும் பீகாரில் இருக்கிறது என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.
மாதவிடாய்
நாப்கின் உபயோகிக்காததற்கு அவர்கள் முன்வைக்கும் ஒரேயொரு காரணம், வறுமை மட்டுமே! பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், செல்லாத மற்ற குழந்தைகளைவிட நான்கு மடங்கு அதிக சுகாதாரத்துடன் இருக்கின்றனர் என்கிறது மற்றோர் ஆய்வு. ஆம், இந்தியாவின் அடுத்த தலைமுறை சிறுமிகளும் பாதுகாப்பற்ற மாதவிடாயைத்தான் எதிர்கொண்டுவருகிறார்கள்.