கேரளாவில் உணவுகள் அனைத்தும் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இதற்கு அப்பகுதியில் சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது காரணமாக இருந்தாலும், சமைக்கும் முறையும் தான் காரணம்.
தமிழ்நாட்டு பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க ஆசையா? அப்ப உடனே இத படிங்க…
இங்கு அப்படி கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இது சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அற்புதமான சுவையில் இருக்கும்.
Kerala Style Ulli Theeyal Recipe
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1/2 கப் (தோலுரித்தது)
புளிச்சாறு – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/2 கப்
மல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
தேங்காய் எண்ணெய் – 1 மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிச்சாறு ஊற்றி, குழம்பு சற்று கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கெட்டியாகி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி!!!