அகத்திக்கீரையில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களும், தொப்பையை குறைக்க விரும்புபவர்களும் ஒருவேளை உணவாக எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இனி 5 நிமிடத்தில் எப்படி அகத்திக்கீரை கஞ்சி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை – 2 கைப்பிடி
புழுங்கலரிசி – 100 கிராம்
பூண்டுப்பல் – 10
மிளகு – 10
வெந்தயம் – 10
சீரகம் – அரை தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகு, பூண்டை தட்டி வைக்கவும். புழுங்கல் அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அகத்திக்கீரையை போட்டு அதனுடன் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், வெந்தயம் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
அகத்திக்கீரை வெந்ததும் தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரில் பொடித்த அரிசியை போட்டு வேக வைக்கவும் கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு வேக வைத்த அகத்திக்கீரை போட்டு கலந்து பரிமாறவும். சத்தான சுவையான கஞ்சி ரெடி.