பெற்றோர்களாக இருப்பது மிகவும் கடினம். அதிலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரா இருப்பது சொல்ல முடியாத அளவில் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு அதிகமாக குறும்புத்தனம் செய்வதோடு, நிறைய தவறுகளும் செய்வார்கள். இதனால் பெற்றோர்களுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக வரும்.
இப்படி கோபம் வந்தால், அப்போது சில பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் என்ன பேசுகிறோம் என்றே தெரிவதில்லை. கோபம் வரும் போது, குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி திட்டக்கூடாதோ அப்படியெல்லாம் திட்டிவிடுவார்கள். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு, நாளடைவில் பெற்றோர்களையே மதிக்காமல் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
எப்போதுமே குழந்தைகளின் குறும்புத்தனத்தைக் கண்டு பெற்றோர்கள் கோபப்படும் போது, குழந்தைகளைத் திட்டாமல், மாறாக, அவர்களிடம் பொறுமையாக பேசி புரிய வைக்க வேண்டும். இப்போது பெற்றோர்கள் கோபமாக இருக்கும் போது குழந்தைகளிடம் எவற்றையெல்லாம் சொல்லக்கூடாது என்று பார்ப்போம்.
கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது
சில பெற்றோர்கள் கோபம் வந்தால், கெட்ட வார்த்தைகளால் குழந்தைகளைத் திட்டுவார்கள். இப்படி திட்டுவதால், குழந்தைகளுக்கு உங்கள் மீது கெட்ட அபிப்பிராயம் ஏற்படுவதோடு, உங்கள் மீதுள்ள மதிப்பு குறைந்துவிடும். ஆகவே எப்போதுமே குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவதை அறவே தவிர்த்திடுங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவது
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இதனால் குழந்தைகள் தங்களின் சுயமரியாதையை தன் பெற்றோர் அசிங்கப்படுத்துவதாக எண்ணி வருந்துவார்கள். பெற்றோர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் பிறந்தோர் அனைவருமே ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். ஒருவேளை உங்கள் குழந்தையிடம் கெட்ட குணம் இருந்தால், அதை அவர்களிடம் சொல்லி புரிய வைத்து திருத்த வேண்டுமே தவிர, மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது.
இகழ்ந்து பேசுவது
உங்கள் குழந்தை எவ்வளவு தான் பெரிய தவறு செய்திருந்தாலும், அப்போது அவர்களை இழிவாக பேசக்கூடாது. இதனால் உங்கள் இருவருக்குள்ளும் உள்ள உறவு தான் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ‘உன்னால் எதுவும் முடியாது’, ‘நீ எதற்கும் உதவாதவன்’ போன்றவற்றையும் சொல்லக்கூடாது.
தவிர்ப்பது
குழந்தை என்றால் தவறு செய்வது இயல்பு தான். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று அவர்களிடம் சரியாக பேசாமல் இருப்பது, வித்தியாசமாக நடத்துவது என்று இருந்தால், பின் உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு அதிகரித்துவிடும்.
அடிப்பது
நிறைய பெற்றோர்கள் கோபமாக இருக்கும் போது, தங்கள் குழந்தைகளை கண்மூடித்தனமாக அடிப்பார்கள். அப்படி எப்போதும் தவறு செய்யும் போது அவர்களை அடிப்பதால், அவர்கள் மனம் கல்லாகிவிடும். அதுமட்டுமின்றி, அவர்களின் மனமும் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே எந்த தவறு செய்தாலும் குழந்தையின் மீது கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.