24.5 C
Chennai
Wednesday, Dec 18, 2024
baby fruit
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன?

ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன.baby fruit

அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணி கூறியதாவது:-

நம் நாட்டில் குழந்தைகள் பிறப்பு முதல் 14 வயது வரை வளர்இளம் பருவம் என கணக்கிடப்படுகிறது. அதற்கேற்றவாறு குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான முழுமையான சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு வருடம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பார்கள்.

இணை உணவு

குழந்தைகளின் பிறப்பில் இருந்து 6 அல்லது 7-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் இணை உணவாக கஞ்சி கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் தான் ருசியானது, குழந்தைகளின் மூளையில் பதிவாகும். எனவே அத்தகைய தருணத்தில் பருப்பு, கீரை, சாதம் இவற்றை கஞ்சியாக கடைந்து கொடுப்பது நல்லது.

அவ்வாறு கொடுத்து பழக்குவதால் குழந்தைகள் 5 வயது வரை இத்தகைய உணவை மறுக்காமல் உண்பார்கள். இத்தகைய கஞ்சி உணவை கொடுத்து பழக்கவில்லை என்றால் இதன் ருசியை அறியாமல் அவற்றை சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். அதனால் அவர்களை வலுக்கட்டாயமாக உண்ண வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

4 மடங்கு எடை

பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

அதிவேக வளர்ச்சி

அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவில் கலோரி

பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.

100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின்கள்

பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.

துரித உணவுகள்

இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.

துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிரச்சினைகளை தவிர்க்க…

அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மஞ்சளை நாம் ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?

nathan

தெரிந்துகொள்வோமா? ஆப்பிளில் மறைந்திருக்கும் பலருக்குத் தெரியாத ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!!!

nathan

எச்சரிக்கும் ஆய்வு..’குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்’

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!

nathan

ஹை-ஹீல்ஸ் ஆபத்து

nathan

தெரிந்துகொள்வோமா? காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா? இந்த இயற்கை பொருட்களை தினமும் தடவுங்க…

nathan

தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது?

nathan

இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்!!!

nathan