பொட்டுக்கடலை மாவுடன் கருப்பட்டி – முட்டை கலந்து அடையாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் புஷ்டி உண்டாகும்.
✦ முளைக்கட்டிய கோதுமையை வெயிலில் காயவைத்து அதனுடன், பாதாம், முந்திரி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு. தினமும் பாலில் 1 தேக்கரண்டி கலந்து கொடுத்து வர குழந்தைகளுக்கு உடல் எடை கூடும்.
– ரக்ஷனா சக்தி, திருநெல்வேலி.
✦ குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்யும்போது காய்கறிகளை பெரியத் துண்டாக வெட்டிப் பயன்படுத்தினால் அதன் சத்துக்கள் வீணாகாது.
✦ குளிர்ச்சியும், இருட்டும் உள்ள இடத்தில் பாலை வைத்திருந்தால் அதிக நேரம் கெடாமலிருக்கும்.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
200 கிராம் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு கிரைண்டரில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 4 தேக்கரண்டி அரிசி மாவைத் தூவி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கொத்துமல்லித் தழை போட்டுக் கலந்து வடை தட்டினால் வடை சூப்பராக இருக்கும்.
✦ எந்த வகை கட்லட் செய்தாலும் அதனுடன் ஏதாவது ஒரு கீரையை சிறிது சேர்க்கவும். கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும்.
✦ ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம்பழம் இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி, கன்டென்ஸ்ட் மில்க், தேன் கலந்து வைத்துக் கொள்ளவும். அதில் அரிசிப் பொரியைக் கலந்து கொடுத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
✦ காய்கறி வேக வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது எடுத்து சூப், குருமா, சப்பாத்தி மாவு செய்யும் போது சேர்க்கலாம்.
✦ சூப் வகை எதுவாக இருந்தாலும் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்தால் சூப் சூப்பராக இருக்கும்.
✦ வெஜிடபிள் சமுசா தயாரித்தவுடன் அதை ஒரு தட்டில் வரிசையாக அடுக்கி, ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு எடுத்து, சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சூப்பராக இருக்கும். நீண்ட நேரம் மொறு மொறுப்பாக இருக்கும்.
✦ வெந்தயக் கீரையில் சாம்பார் செய்யும்போது தாளிக்கும் போதே கீரையை வதக்கிவிட்டு, பிறகு பருப்பு சேர்த்தால் சாம்பார் கசக்காமல் இருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
✦ வெயில் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீர்ச்சுருக்கு அதிகம் ஏற்படும். அதிலும், பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே காரணம். நீர்சுருக்கு ஏற்படாமலிருக்க, தாராளமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. அதுபோன்று இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
எளிய வைத்தியம் நூலிலிருந்து
– சி.பன்னீர் செல்வம், செங்கற்பட்டு.