கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா
தேவையான பொருட்கள் :
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
இடித்த பூண்டு – நான்கு பல்
பெருங்காயம் – சிறிதளவு
கோவக்காய் -300 கிராம்
பவுடர் செய்ய :
கடலை பருப்பு – மூன்று டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு
செய்முறை :
* கோவக்காயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கோவக்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
* கோவக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு அரைத்த பொடி சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
* சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா ரெடி.
* இந்த செட்டிநாடு கோவக்காய் மசாலா தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.