கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள். நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள்.
இங்கு அந்த பிடி கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1/2 கப் வெல்லம் – 1/4 கப் தண்ணீர் – 1 மற்றும் 1/4 கப் துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை எண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும். ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும். மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி!!!