பொதுவாக கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இந்த கீரை மூளை நன்கு செயல்படத் தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே தான் இந்த கீரை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
சரி, இப்போது அந்த வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சாம்பார் செய்வதென்று பார்ப்போமா!!!
Vallarai Keerai Sambar
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 6 பற்கள்
வல்லாரைக் கீரை – 3 கப் (நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பருப்பு வேக வைக்க…
துவரம் பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
செய்முறை:
முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் கீரையைப் போட்டு நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், புளிச்சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் குக்கரில் உள்ள பருப்பை மசித்து சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வல்லாரைக் கீரை சாம்பார் ரெடி!!!