இளம் வயதில் எல்லோருக்குமே ஒரு சில ஆசை, கனவுகள் இருக்கும். அவை பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பாகவே நிறைவேறக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களை திருமணத்திற்கு முன்பு பூர்த்தி செய்து கொள்வதுதான் நல்லது. திருமணமான பிறகு ‘இதையெல்லாம் முன்பே செய்திருக்கலாமே’ என்று புலம்புவதில் பிரயோஜனமில்லை.
* திருமணத்திற்கு முன்பே பொருளாதார ரீதியில் வலுவாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் ஓரளவு செட்டிலாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. அதனை சாத்தியமாக்குவதற்கான திட்டமிடல் சரியாக அமைய வேண்டும். வீண் செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஓரளவு பணமும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக்கொள்வது பெண் வீட்டார் மத்தியில் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். திருமணமான பிறகு பொருளாதார நிலைமை சீராக இல்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை.
* திருமணத்திற்கு முன்பு பிடித்தமான வேலையில் நிலை நிறுத்திக்கொள்வது சிறந்தது. பணியில் அடைய நினைக்கும் உயரங்களை அடைந்தபின், பணி பாதுகாப்பை உறுதி செய்த பின், திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக திருமணம் செய்துகொள்வதற்கு 30 வயது வரை காலம் தாழ்த்தாதீர்கள்.
* குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாகவோ, நண்பர்களுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காகவோ திருமண பந்தத்தில் நுழையாதீர்கள். திருமணம் செய்து கொள்வதற்கு மனப்பூர்வமாக தயாராக வேண்டும். விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பதிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இருவருக்கும் சம்மதமும், புரிதலும் இருக்க வேண்டும்.
* திருமணத்திற்கு முன்பு சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சிலர் பயண பிரியர்களாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஜாலியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனை தாமதமில்லாமல் நிறைவேற்றிவிட வேண்டும். நண்பர்களுடன் பொழுதை போக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் திருமணத்திற்கு பிறகு எட்டிப்பார்க்கக்கூடாது. வாழ்க்கை துணையுடன் விரும்பிய பயணங்களை மேற்கொள்ளலாம்.
* இன்பமும், துன்பமும் கலந்ததுதான் இல்லற வாழ்க்கை. அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை திருமணத்திற்கு முன்பே பெற்றிருக்க வேண்டும். திருமணமானவர்களின் அனுபவத்தில் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றறிந்து கொள்வதும் சிறப்பானது.
* காதல் இல்லாமல் இளமை பருவ வாழ்க்கையை கடந்து விட்டோமே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். திருமணம் செய்து கொள்ளப்போகும் துணையை காதலிக்க தொடங்குங்கள். நிச்சயம் செய்த பிறகு மனம் விட்டு பேசுங்கள். காதல் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு இல்லறத்துக்குள் நுழையுங்கள். இருவருக்கும் இடையே ஒருமித்த புரிதல் வந்துவிட்டால்போதும். வாழ்க்கையில் வசந்தம் வீசும்.
Courtesy: MalaiMalar