குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை இப்போது செல்போனுடன்தான் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே அதிமாக விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன. அதிக அளவில் செல்போனை பயன்படுத்துகிறவர்களின் உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. அதுபற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இது தொடர்பான முக்கியமான ஆய்வு ஒன்றில், செல்போனை அதிகம் பயன்படுத்துகிறவர்களின் காதுகேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களின் காதுகேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக் குட்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பெண்களும் அடக்கம்.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 52 சதவீதத்தினர் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டுமின்றி, அதை பயன் படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள் என்று அந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வுக்கு உள்ளானவர்களில் 51 சதவீதத்தினர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 40 சதவீதத்தினர் வலது காதில்வைத்து பேசியவர்கள். மீதி 9 சதவீதத்தினர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.
இவர்களில் பெரும்பகுதியினர் காது வலியாலும், காது அடைப்பினாலும், காது சரியாகக் கேட்காமலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சிலர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.