குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான உணவு தாய்ப்பால். எனவே குழந்தைகள் பிறந்து குறைந்தது 6 மாதங்களுக்கு அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது தாய்ப்பாலில் குழந்தைகளின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்று கூற முடியாவிட்டாலும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களுக்கு அவர்களுக்கு எந்த விதமான நோய்களும் வராமல் தடுப்பதற்குத் தாய்ப்பால் உதவும்.
அதே போல் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் உடல் எடையினை அதிகரிக்க முடியும். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாயின் உடலிலிருந்தே வருவதால் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். எனவே தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஆல்கஹால் உங்கள் உடலில் சில மாற்றங்களைச் செய்யும்.
தாய்ப்பால் அளவு
நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் ஆல்கஹால் அருந்துவதால் தாய்ப்பாலின் அளவினை குறைக்கிறது. அதாவது 20 % முதல் 23% வரையிலான தாய்ப்பாலின் அளவு குறைவதினால் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். குழந்தையின் ஆரம்பக் காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே ஊட்டச்சத்து தாய்ப்பால் மட்டும் தான் அதன் அளவு குறையும் போது அவர்களின் வளர்ச்சியில் விளைவினை ஏற்படுத்தும்.
குழந்தைக்குச் செல்லுதல்
நீங்கள் அருந்தும் ஆல்கஹால் உங்களின் தாய்ப்பால் வழியாக 0.5% முதல் 3% வரை குழந்தைகளுக்குச் செல்லுமாம். இதன் அளவு குறைவாகக் காணப்பட்டாலும் குழந்தைகளின் உடலுக்கு இது மிகப் பெரிய அளவாகும். இதனால் குழந்தைகளுக்குக் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஊட்டச்சத்துக் குறைபாடு
தாயின் உடலில் ஆல்கஹால் இருப்பதினால் தாய்ப்பாலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின் அளவினை உடலினால் எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.
நோய் எதிர்ப்புச் சக்தி
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் பிறந்து சில மாதங்களில் வளர்ச்சியடையத் தொடங்கும். இதற்கு தாய்ப்பாலில் இருந்து தேவையான அனைத்து ஆன்டிபாடிகளையும் பெற வேண்டும். ஆனால் தாயின் தாய்ப்பாலில் சிறிதளவு ஆல்கஹால் இருந்தாலும் அவர்களுத் தேவையான ஆன்டிபாடிகளை உறிஞ்ச முடியாமல் போய்விடும். இதனால் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி
குழந்தைகளின் ஆரம்பக் காலத்தில் அதிக அளவு ஆல்கஹாலினால் பாதிக்கப்படுவதால் கல்லீரல் பிரச்சனை மட்டுமல்ல மூளை வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டு மூளையின் செல்கள் விரைவில் சிதைவடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முறையற்ற தூக்கம் மற்றும் உணவு
குழந்தைகளுக்கு ஆல்கஹால் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பதினால் அவர்களின் தூக்கம் மற்றும் உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மற்றும் உணவு மிக முக்கியமான ஒன்றாக இருப்பதினால், ஆல்கஹால் தாய்ப்பாலில் இருக்கும் போது அவர்களினால் ஆழமான தூக்கத்தினை மேற்கொள்ள முடியாது.
பாலின் சுவை
நீங்கள் ஆல்கஹால் அருந்துவதால் உங்கள் பாலின் சுவையை மாற்றுகிறது. இதனால் குழந்தைகள் குறைவான அளவு தாய்ப்பாலினை குடிக்கிறார்கள். குழந்தைகள் பிறந்து சில மாதங்களில் கண்டிப்பாக அவர்களின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் குறைவான தாய்ப்பாலினை அருந்துவதால் உடல் எடை கூடுவதில் சிக்கல்கள் ஏற்படுவதால் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
தீடீர் இறப்பு
தாய்ப்பாலில் அதிக அளவு ஆல்கஹால் கலக்கும்போது அதனைப் பருகுவதால் குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு திடீர் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உங்களின் குழந்தை நலனுக்காக சில மாதங்கள் ஆல்கஹால் அருந்தாமல் இருப்பதே நல்லது.