25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
food u
ஆரோக்கிய உணவு

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

 

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள்.
உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 தண்ணீர்


ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

 வெந்தயத் தண்ணீர்


சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அரு
மருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.

வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.

 அருகம்புல் சாறு


அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

 வெள்ளைப்பூசணி  சாறு


வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

 இஞ்சிச் சாறு


இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

 நீராகாரம்


காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் (றீணீநீtஷீதீணீநீவீறீறீus) என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

 நெல்லிக்காய்ச் சாறு


தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

   இளநீர்


இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.

எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

 எலுமிச்சைச் சாறு


பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல.

எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!

 பச்சை முட்டை


ஒல்லியாக இருப்பவர்கள், ‘ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்!!!

nathan

இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடித்தால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

nathan

தெரிந்து கொள்வோம்.. முளைவிட்ட பச்சைப்பயிறு தரும் நன்மைகள்..

nathan

ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது கவுனி அரிசி.

nathan

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க…! : உடல் எடை அதுவாக குறையும்

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ் -தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த நேவி பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

nathan

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

nathan