நீங்கள் உணவுப் பிரியரா? அப்படியானால் நீங்கள் அடிக்கடி வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றால் அவஸ்தைப்படுவதோடு, வாய்வுத் தொல்லையாலும் கஷ்டப்படுவீர்கள். அதோடு, இதுவரை அணிந்து வந்த உங்கள் ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாகி இருப்பதையும் காண்பீர்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் இப்பிரச்சனையை கட்டாயம் சந்திக்க நேரிடும்.
மேலும் உணவுப் பிரியர்களின் உடலில் தான் நச்சுக்களின் அளவு அதிகம் இருக்கும். உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்தால், அதுவே பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டியது அவசியம். அதற்கு உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களை உண்பதோடு, ஒருசில பானங்களையும் குடிக்க வேண்டும்.
உடலை சுத்தம் செய்வதற்கு ஊதா நிற முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு வயிற்று உப்புசம், அஜீரண கோளாறைப் போக்கி, நச்சுமிக்க உடலை சுத்தம் செய்ய உதவும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிக்கத் தேவையான பொருட்கள்: * ஊதா முட்டைக்கோஸ் – 2 கப் * செலரி – 3 தண்டு * எலுமிச்சை – 1/2 * பச்சை ஆப்பிள் – 1/2
ஊதா முட்டைக்கோஸ் ஊதா முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள நீர்ம அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், டாக்ஸின்களிடம் இருந்து செல்களைப் பாதுகாக்கும்.
செலரி செலரி கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இந்த கீரை செரிமான பாதை மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுத்து, அஜீரண கோளாறு ஏற்படாமலும், வயிற்று உப்புசத்தில் இருந்தும் விடுவிக்கும்.
தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் நீரில் கழுவி, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். பின் அதை வடிகட்டினால், உடலை சுத்தம் செய்ய உதவும் அற்புத பானம் தயார்! இந்த பானம் குடிப்பதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். இருப்பினும் இம்மாதிரியான பானங்கள் தான் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒருவர் ஊதா முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கீழே அந்த நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
புற்றுநோய் ஊதா முட்டைக்கோஸ் புற்றுநோயைத் தடுக்க உதவி புரியும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ப்ரீ-ராடிக்கல்கள் தான் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றிற்கு முக்கிய காரணம். குறிப்பாக இந்த வகை முட்டைக்கோஸ் பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக பல ஆய்வுளில் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
எடை குறைவு ஊதா முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு, ஆனால் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம். மேலும் இதில் முக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர், இந்த வகை முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம், எடையை எளிதில் குறைக்க முடியும்.
கண் பராமரிப்பு வைட்டமின் ஏ சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, கண்களுக்கும் தான் நல்லது. வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வைக்கு உதவுவதோடு, மாகுலர் திசு சிதைவடைவதைத் தடுக்கும் மற்றும் கண் புரை உருவாவதையும் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஏ ஊதா நிற முட்டைக்கோஸில் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
அல்சர் ஊதா நிற முட்டைக்கோஸில் ஏராளமான அளவில் க்ளுடாமைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமினோ அமிலம் உடலினுள் உள்ள அழற்சியைற் குறைப்பதோடு, இரைப்பை அல்சரால் ஏற்படும் வலியையும் குறைக்கும். எனவே அல்சர் இருப்பவர்கள், ஊதா முட்டைக்கோஸ் ஜூஸை குடித்து வர, விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.
நோயெதிர்ப்பு மண்டலம் ஊதா முட்டைக்கோஸில் வைட்டமின் சி மட்டுமின்றி, அஸ்கார்பிக் அமிலம் என்னும் முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும் . முக்கியமாக இது வெள்ளையணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடச் செய்யும்.
அல்சைமர் நோய் ஊதா முட்டைக்கோஸில் இருக்கும் அந்தோசையனின்கள் ப்ளேக் உருவாக்கத்தைக் குறைப்பதோடு, மூளையைத் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே வயதான காலத்தில் அல்சைமர் நோய் தாக்காமல் இருக்க வேண்டுமானால், ஊதா முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் அல்சைமர் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
எலும்புகளின் அடர்த்தி ஊதா நிற முட்டைக்கோஸில் உள்ள அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் இதர முக்கிய கனிமச்சத்துக்கள், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை வருவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
குறிப்பு * ஹைப்போதைராய்டு உள்ளவர்கள், ஊதா நிற முட்டைக்கோஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். * கர்ப்பிணிகள் ஊதா நிற முட்டைக்கோஸை சாப்பிடக்கூடாது.