ஆரோக்கிய உணவு

பீதியைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி நிஜம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு பரவிய பிளாஸ்டிக் முட்டை பீதியைத் தொடர்ந்து, இப்போது பிளாஸ்டிக் அரிசி பீதி வேகமாகப் பரவிவருகிறது. சென்னை அயனாவரத்தில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை அமைந்து உள்ளது. இந்தப் பணிமனையில், ஓட்டுனர், நடத்துனர், நேரக் கண்காணிப்பாளர், மெக்கானிக் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடந்த வாரம் இங்கு தயாரிக்கப்பட்ட சாதம், பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுபற்றி கேள்விப்பட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி டாக்டர் கதிரவன், அலுவலர் சதாசிவம் ஆகியோர், பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்டதாக கூறப்பட்ட உணவை பறிமுதல் செய்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அதனை முடித்துவிட்டு வெளியே வந்த டாக்டர் கதிரவன், ‘உணவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளோம்” என்று கூறியிருந்தார்.பிளாஸ்டிக் அரிசி பீதி மக்களிடம் பரவிவருவதால் அது பற்றி உண்மை நிலை என்னவாக இருக்கும் என்று டாக்டர் கதிரவனிடமே கேட்டோம்.
”அயனாவரம் பணிமனையில் பறிமுதல் செய்யப்பட்ட உணவில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா என பரிசோதித்தோம்.எங்களுடைய முதல் கட்ட ஆய்வின்படி பிளாஸ்டிக் அரிசி இருப்பதற்கான எந்த முகாந்திரமும் கிடைக்கவில்லை. எங்களுடைய முடிவை உறுதிப்படுத்துவதற்காக, உணவின் மாதிரியை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.
உணவின் தரம் குறைவாக ஒருவேளை வாய்ப்பு இருக்கிறதே தவிர, பிளாஸ்டிக் அரிசியாக இருக்க வாய்ப்பே இல்லை. காரணம், இதுவரை நம் நாட்டில் எங்குமே பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.
இது வெறும் வதந்திதான். எனவே, பொதுமக்கள் இதுபற்றி பீதி அடைய தேவையில்லை. மேலும், உணவுப்பொருட்கள் தரம் பற்றி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 94440 42322 என்ற எண்ணில் தங்களது கருத்தினைக் கூறலாம். ஒரு நாளிலேயே அந்தப் புகாருக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் உறுதியாக!
பிளாஸ்டிக் அரிசி என்பது வெறும் வதந்திதான் என்பதையே கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலரான சோமசுந்தரமும் உறுதி செய்கிறார்.”பிளாஸ்டிக் அரிசி என்பது எந்த லாஜிக்கும் இல்லாத வெற்று வதந்திதான். பிளாஸ்டிக்கால் அரிசியைத் தயார் செய்ய முடியும் என்பதற்கு எந்த அறிவுப்பூர்வமான காரணமும் இல்லை. பொருளாதார ரீதியான காரணமும் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதுவே ஒரு கிலோ பிளாஸ்டிக்கின் விலை 100 ரூபாய்.
யாராவது 100 ரூபாய் செலவு செய்து 50 ரூபாய்க்கு அரிசி தயார் செய்து பாதிக்குப் பாதி நஷ்டமடைய விரும்புவார்களா? அப்படியே பிளாஸ்டிக்கால் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தயார் செய்கிறார்கள் என்று சொன்னாலும் அரிசியைப் பார்த்த உடனேயோ, சமைக்கும்போதோ தெரியாமல் போய்விடுமா? இதன் பின்னணியில் ஒரே ஒரு வாய்ப்பு வேண்டுமானால் இருக்கிறது.
தரமில்லாத அரிசியில் தயாரானால் சாதம் பிளாஸ்டிக் போல தோற்றமளிக்க வாய்ப்பு இருக்கிறது. இயல்புக்கு மாறான மணம் வீச வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, ஸ்டார்ச் உணவுப்பொருளான கிழங்கு போன்ற மாற்று உணவுப்பொருளில் இருந்து அரிசி போல தயாரித்து கலப்படம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதைப் போல, பக்கெட் தயாரிக்கும் பிளாஸ்டிக் கொண்டு அரிசி தயாராகிறது, அது விற்பனைக்கு வருகிறது என்ற குழந்தைத்தனமான பொய்யையெல்லாம் மக்கள் நம்ப வேண்டியதில்லை.
முன்பு இதுபோலத்தான் முட்டை பிளாஸ்டிக்கில் வருகிறது என்று கூறினார்கள். சீதோஷ்ண நிலை மாறி கெட்டுப் போன முட்டை பிளாஸ்டிக் போல சற்று தோற்றமளிக்கும் என்பதை வைத்து அப்படி வதந்தி பரவியது. கொஞ்சம் நடைமுறையில் யோசித்துப் பாருங்கள்.முட்டையின் மஞ்சள் கருவை செயற்கையாகத் தயாரித்து, அதன் மேல் வெள்ளைக்கருவை செயற்கையாகத் தயாரித்து, அதற்கு மேல் வெள்ளை ஓட்டையும் பிளாஸ்டிக்கால் தயார் செய்து மூட வேண்டும் என்றால் ஒரு முட்டை தயாரிப்புக்கு மட்டும் எத்தனை ரூபாய் செலவாகும்?
அப்படியே வெளிநாட்டில் தயாரானாலும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்? வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்யும் அளவுதானே நாம் முட்டை உற்பத்தியில் அபாரமான வளர்ச்சியோடு இருக்கிறோம்? எனவே, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்பதையெல்லாம் மக்கள் கண்டுகொள்ள வேண்டியதில்லை.”plastic rice

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button