29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
126682 thumb
ஆரோக்கிய உணவு

3 சீக்ரெட்ஸ் – டயட். ஆக்டிவ். ரிலாக்ஸ்.

உணவுதான் உற்சாகம்; உற்சாகம்தான் உணவு. நல்ல உணவுகள் உற்சாகத்தைத் தரும். உற்சாகமாக இருந்தால், உடலின் இயக்கம் சீராகும். மனம் அமைதி பெறும். இதைப் புரிந்துகொண்டாலே வாழ்வின் ஃபார்முலா நமக்கு எளிதாகிவிடும். உணவு, ஓய்வு, இயக்கம் இந்த மூன்றுக்குமே அடித்தளமாக இருப்பது சரியான வாழ்க்கைமுறை. இதைப் புரிந்துசெய்யக் கற்றுக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும். ஆரோக்கியம் கைகூடும்.

உணவு

காலை உணவு முக்கியம்!

குளிப்பது, பல் தேய்ப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு காலை உணவும் முக்கியம். அன்றைய நாளுக்கான எனர்ஜியைத் தருவது காலை உணவு மட்டும்தான். உழைக்கத் தேவையான சக்தி, காலையில் உண்ணும் இட்லி, பொங்கல், தோசையில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், அடுத்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்வோம். இதனால், உடலுக்குக் கெடுதிதான்.

உணவை ஸ்பெஷலாக்குங்கள்!

பெட்ரோல் போட்டால்தான் வண்டி ஓடும். அதுபோல உணவுதான் நமக்கு பெட்ரோல். உணவு, சரியான அளவிலும் சமச்சீரான சத்துக்களுடனும் இருக்கவேண்டியது அவசியம். தேவைக்கு ஏற்ப, அன்றாடம் உணவை சுவாரஸ்யப் படுத்திக்கொண்டே இருந்தால், உணவு உண்பதில் ஆர்வம் பிறக்கும். இதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்ந்திடலாம்.

அடிப்படையான உணவு விதிகள் 6

முழு தானியங்கள் – 1 கப், காய்கறி – 3 கப், பழங்கள் – 2 கப், பயறு வகைகள் – 1 கப், பால், பால் சார்ந்த உணவுகள் – 1 கப், இறுதியாக எண்ணெய் மற்றும் நெய் – 2 டீஸ்பூன். இந்த 6 உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் இருநாட்கள் அசைவம் சாப்பிடலாம்.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பலர், அவர்கள் வேலைசெய்யும் மேசையிலேயே டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிட்டுவிட்டு, காலி டிபன் பாக்ஸை அடைத்துப் பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வேலைசெய்கிறார்கள். கையில் ஸ்பூன் இருப்பதால், கை கழுவக்கூட எழுந்திருப்பது இல்லை. `பசித்துப் புசி’ என்பது போய், கடமைக்குச் சாப்பிடுவது என்பதாக மாறிவிட்டது. இது மிகவும் மோசமான பழக்கம். ஹோட்டலில் பிரியாணியைச் சாப்பிடத் துடிக்கும் ஆசையில் பாதியையாவது மதிய உணவை உண்பதில் காட்டுவது நல்லது. ரசித்து, ருசித்து உண்ணும்போது உணவின் சுவை மட்டும் அல்ல, நம் ஆரோக்கியமும் மேம்படும்.

குடும்பத்துடன் சேர்ந்து ஒருவேளை

காலையும் மதியமும் பள்ளி, கல்லூரி, அலுவலகம். என அவரவருக்கு அவரவர் உலகம் உண்டு. எனவே, குடும்பமாகச் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். ஆனால், ஒரு நாளில் ஒரு வேளையாவது குடும்பத்துடன் சேர்ந்து உண்பது, உடலுக்கும் மனதுக்கும் உறவுக்கும் உறுதுணையாக இருக்கும். எனவே, இரவு உணவைக் குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்துதான் உண்பது எனத் திட்டமிடுங்கள்.

சாப்பிட்டவுடன் என்ன செய்யலாம்?

சாப்பிட்டவுடன் படுக்கவே கூடாது. மடமடவென்று நீரும் குடிக்கக் கூடாது. இருபது நிமிடங்கள் கழித்து நீர் அருந்தலாம். உணவைச் சாப்பிடுவதற்குக் குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துகொள்ள வேண்டும். நாள் முழுவதுமே இளஞ்சூடான நீரை அருந்துவது மிகவும் நல்லது. இது செரிமானத்துக்கு உதவும்.

126682 thumb

உடலுக்கு நீர் முக்கியம்

எந்த சீஸனாக இருந்தாலும் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை குடிப்பது நல்லது. தண்ணீர் மட்டுமே குடிக்க போர் அடித்தால், இளநீர், ஜூஸ், ரசம், சூப், கஞ்சி எனத் திரவ உணவுகளையும் சாப்பிடலாம்.

கிரேவிங் உணர்வைக் கையாள்வது.

தன்னைத் தானே கட்டுக்குள்வைக்க முடியாவிட்டால், அதன் பெயர் அடிமைத்தனம். பின்னர் எப்படி மற்றவற்றைக் கட்டுக்குள்வைக்க முடியும். `ஆலு சமோசாவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்’ என்ற தூண்டுதலைக் கட்டுப்படுத்தத் தெரிந்துகொண்டால், நிச்சயம் கிரேவிங் உணர்வை வெல்ல முடியும். இந்த கிரேவிங் உணர்வைக் கையாளத் தெரிந்தால் போதும், குறித்த மாதத்தில் உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கிடைக்கும்.

இயக்கம்

உடலுக்கு எவ்வளவு வேலை கொடுக்கலாம்?

இன்று உடலுக்கு அதிக வேலை கொடுப்பது இல்லை. மனதுக்கும் மூளைக்கும் மட்டுமே வேலை தருகிறோம். அதனால், அரை மணி நேரம் உடல் உழைக்கட்டும். அது உடற்பயிற்சியோ, யோகாவோ, தோட்ட வேலைகளோ. ஏதாவது ஒன்றை அவசியம் பிடித்துக்கொள்ளுங்கள்.

பிடிக்காதவற்றுக்கு `நோ’ சொல்லுங்கள்!

பிடிக்காத வேலைகளைச் செய்வதும், பிடிக்காத நபருடன் பழகுவதும் நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம். தேவைக்காகத்தான் பெரும்பாலும் பிடிக்காத வேலையைப் பற்றிக்கொள்கிறோம். வேலையை நேசித்துச்செய்ய முடியாவிட்டால், அதில் இருந்து விலகுவது நல்லது. அதுபோல, தேவைகளைச் சுருக்கிக் கொண்டாலும், ஸ்ட்ரெஸைத் தவிர்க்கலாம்; மனஉளைச்சலைக் குறைக்கலாம்.

இனி நேரத்துக்கு எழுந்திருக்கலாம்

11 மணிக்கு தூங்கச் சென்றால், ஐந்து மணிக்கு எப்படி எழுந்திருக்க முடியும்? உங்கள் நேரத்தை ஆக்கிரமிக்கும் சோஷியல் மீடியா, டி.வி நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிடுவது நல்லது. 10 மணிக்குத் தூங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்ளுங்கள். தலையணையிடம் ஐந்துமுறை சொல்லிவிட்டுத் தூங்குங்கள். தானாகச் சரியான நேரத்துக்கு விழிப்பு வரும். இது ஒருவகை சுய அறிவுரை (Auto suggestion); பலருக்கும் நல்ல பலன் தருவது. இப்படி, சில நாட்கள் செய்தால், இதுவே நாளடைவில் பழகிவிடும். தானாகவே குறித்த நேரத்துக்கு விழிப்பு வரும்.

நேரத்துக்கு எல்லாமும் நடக்க வேண்டுமா?

நாம் செய்யும் ஒவ்வொரு காரண காரியமும் ஒன்றை ஒன்று சார்ந்தது. எட்டு மணிக்குக் காலை உணவைச் சாப்பிட வேண்டும் எனில், ஐந்து மணிக்கு எழுந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதுபோல, ஒன்பது மணிக்குத் தூங்கி இருந்தால் மட்டுமே ஐந்து மணிக்கு எழுந்திருக்க முடியும். செயல்-நேரம்-பழக்கம் இந்த மூன்றையும் சரியாகச் செய்துவருவதே சரியான வாழ்க்கை முறை.

மாதத்தில் ஒரு நாள் என்னுடையது!

ஒரு நாளை நிச்சயம் நமக்கானதாக மாற்றினால் தான் ஸ்ட்ரெஸ் உலகை எதிர்கொள்ளச் சக்தி கிடைக்கும். பிடித்ததை மட்டும் செய்கிற நாள் அது. பயணம் மேற்கொள்வது, நாள் முழுக்கத் தூங்குவது, மூன்று வேளையும் பிடித்த உணவை உண்பது, எதுவும் செய்யாமல் சும்மாவே இருப்பது. இப்படியான தனக்கு பிடித்தவற்றைச் செய்திட ஒரு நாளை உங்களுக்காக உருவாக்குங்கள்.

உன்னை முதலில் கவனி!

அவசர அவசரமாகக் காலையில் எழுந்து ஓடி, களைத்து வீடு திரும்பி, அயராது உழைப்பது குடும்பத்துக்காக என்றாலும், `நமக்காக என்ன செய்தோம்?’ என ஒருமுறை சிந்தியுங்கள். உழைக்கும் உடலுக்கு நீங்கள் செய்த கைமாறு என்ன? உழைத்த உடலுக்கும் சிந்திந்த மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். பிறர் வழியைப் பார்த்துவிட்டு, தம் வழியை மறத்தல் ஆகாது. பிறரைக் கவனித்தபடி தங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்குத்தான் மேற்கண்ட வாசகம் நன்றாகப் பொருந்தும். உங்களுக்கான வழியைச் சரியாகத் தேர்ந்தெடுங்கள். இந்த முடிவு உங்கள் உடலையும் மனதையும் சரியாக இயக்கும்.

என்னை என்னுடனே ஒப்பிடுதல்

மனம் லகுவாக இருக்க வேண்டும். அதேபோல் சீராக இயங்க வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் தேவை. என்னை நானே மேம்படுத்திக்கொள்ள, என்னை என்னுடன் ஒப்பிட்டுக்கொள்வதே சரி. `முன்பைவிட இப்போதுதான் நான் வேலையில் அதிகக் கவனம் செலுத்துகிறேன்’, `கொஞ்சம் ஹெல்த்தியாக உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்கிறேன்’ போன்ற ஒப்பீடுகளை உங்களுக்குள்ளேயே நடத்துங்கள். அப்போதுதான் தீய குணங்கள், பழக்கங்கள் விலகி, நம் உடல் மற்றும் மனதின் இயக்கம் சீராகும்.

ஓய்வு

ஆழமான தூக்கம் அரை வைத்தியர்!

பிறந்த குழந்தைகள் நாள் முழுவதும் தூங்கும். வயது ஏற ஏறத் தூக்கம் குறையும். உடலில் உள்ள பயோலாஜிக்கல் கிளாக்குக்கு ஏற்றவாறு ஒரு நாளைத் திட்டமிட வேண்டும். ஆழ்ந்து தூங்க வேண்டும். இதுவே பாதி நோய்களைத் தவிர்க்கும்; தடுக்கும். சீக்கிரம் தூங்கினால் மட்டுமே ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். குறிப்பாக நள்ளிரவு 11-4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் இருப்பது, நோய்களைத் தடுக்கும். பெரியவர்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கமும், வயதானவர்களுக்கு ஆறு மணி நேரத் தூக்கமும் இருப்பது நல்லது. சரியான தூக்கம் இல்லை எனில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எதுவும் கட்டுக்குள் இருக்காது. மொபைலில் ‘செல்ஃப் ஹீலிங்’ ஆப்ஸை டவுன்லோடு செய்துகொண்டு, அந்த ரம்மியமான இசையைக் கேளுங்கள்; ஆழ்ந்த தூக்கம் நிச்சயம் வரும்.

கொஞ்சம் மனம் சொல்வதையும் கேளுங்கள்!

காலையில் எழுந்ததும் பால் காய்ச்சி, காபி போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பிடித்தப் பாடலைக்கூட கேட்டுவிட்டு, பால் காய்ச்சச் செல்லலாம். ஒரு நிமிடம் சிந்தித்து, காலையில் தூங்கி எழுந்ததும் நீங்கள் என்ன செய்தால் உங்களை உற்சாகப்படுத்துமோ, அதைச் செய்வது அன்றைய நாளை அழகாக்கும்; உற்சாகமாக மாற்றும்.

மூளைக்கு லீவ் வேண்டும்!

சிந்திப்பதும் வேலைதான் என்பதால், தூங்கும் நேரத்தைத் தவிர விழித்திருக்கும் நேரம் முழுவதும் மூளைக்கு எவ்வளவு வேலை தருகிறோம். அதற்கான ஒரு சின்ன பிரேக்காக தியானம் இருக்கட்டும். எதையும் சிந்திக்காமல் கண் மூடி, மூச்சைக் கவனிக்கும் தியானம்தான் மூளைக்கான லீவ்.

பிடித்துச் செய்வதும் ஒரு ரிலாக்சேஷன்தான்!

தவிர்க்க முடியாத சூழலில், பிடிக்காத வேலையைச் செய்ய நேர்ந்தால், அதைப் பிடித்துச்செய்வதாக எண்ணிச் செய்துபாருங்கள். பிடிக்காத சமையல் வேலை, பிடிக்கத் தொடங்கும். பிடிக்காத வீட்டு வேலைகளும், பிடிக்கத் தொடங்கும். இசையைக் கேட்கப் பிடிக்கும் எனில் கேளுங்கள். `இன்று மைசூர்பாக்கு சாப்பி டணும்’ என்று தோன்றினால் சாப்பிட்டுவிடுங்கள். அனைத்தும் கைக்கு அருகிலேயே கிடைக்கக் கூடியவைதான். நேசித்துச் செய்வதும் மனதுக்கு ரிலாக்சேஷன்தான்.

ஓராயிரம் கி.மீ தொலைவிலான பயணம்கூட ஒரு முதல் அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது. உடலையும் உள்ளத்தையும் காக்கும் ஆரோக்கிய விதிகள் பல இருந்தாலும், அதைத் தொடங்க வேண்டும் என்று எண்ணுவதே முதல் வெற்றிதான். நமக்கான வெற்றி தொடங்கிவிட்டது. தொடருங்கள், வாழ்த்துகள்!

Related posts

உங்களுக்கு தெரியுமா தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

nathan

நொறுக்கு தீனிகள் மீதான நாட்டம் – உணவு பழக்கம்

nathan

சூப்பர் டிப்ஸ் ! சளி, இருமல் தொல்லையா… இதமான மைசூர் ரசத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

nathan

காலை வேளையில் வரகு அரிசி பருப்பு அடை

nathan

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

ஆற்றலை தரும் வெஜிடபிள் ஊத்தாப்பம்

nathan

சுவையான காராமணி சாண்ட்விச்

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan