29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
shutterstock 232207759 19331
ஆரோக்கிய உணவு

சிப்ஸ் சுவைக்கத் தூண்டும்தான்… ஆனால், உடல்நலம்?!’ மருத்துவம் விவரிக்கும் உண்மை

சிப்ஸ்… அமெரிக்காவின் முதல் 10 இடங்களில் இருக்கும் ஸ்நாக்ஸ் பட்டியலில் இதற்குத்தான் முதல் இடம். நம் ஊரில், பலகாரக்கடை தொடங்கி மளிகைக்கடை வரை நீக்கமற நிறைந்திருக்கும் சிப்ஸ் பாக்கெட்களைப் பார்த்தால், போகிற போக்கில் இந்தியாவே முதல் இடம் பிடித்துவிடுமோ என்று தோன்றுகிறது. மொறு மொறு சுவை… அதிலும் இதைச் சாப்பிடும்போது பெரியவர்களே குழந்தைகளாகிவிடும் அதிசயம்! மொத்தத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத, முக்கியமான ஸ்நாக்ஸ் ஆகிவிட்டது சிப்ஸ்!

சிப்ஸ்

சபரிமலைக்கு மாலை போட்டுப் போனவர்கள் திரும்பி வந்ததும், நம்மவர்கள் `சுவாமி தரிசனம் நல்லபடியா முடிஞ்சுதா?’ என்று கேட்பது இருக்கட்டும்; `கேரளாவுல இருந்து சிப்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா?’ என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கும். நேந்திரம் சிப்ஸுக்கு அபார ரசிகர்கள் நம்மவர்கள். இன்றைக்கும் தமிழகத்தின் பல ஊர்களில், சுடச்சுட போட்டுத்தரும் சிப்ஸ் கடைகளில் கூட்டம் அள்ளுகிறது. `பன்சிலால் லாலா கடை’, `முருகன் ஸ்வீட்ஸ்’, `அருந்ததி ஸ்வீட் ஸ்டால்’… மாதிரி `சிப்ஸ்’ கடைகளும் இன்றைக்குப் பரவலாகிவிட்டன. வீட்டில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு… பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா!’ என்று பிள்ளைகளை அனுப்பும் அளவுக்கு இது நம்மோடு கலந்துவிட்டது; திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் பொருளாகிவிட்டது; மதுப் பிரியர்களுக்கு பிரதானமான `சைடு டிஷ்’ என்ற பெயரையும் எடுத்துவிட்டது.

நேந்திரங்காய், வாழைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சேனை… என சிப்ஸுகளில் பல வகைகள் இருந்தாலும், உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் எக்கச்சக்கமானவர்களின் ஃபேவரைட். அமெரிக்காவில் இதை `பொட்டெடோ சிப்’ என்கிறார்கள்; இங்கிலாந்தில், `க்ரிஸ்ப்’ (Crisp) என்கிறார்கள். கொத்தவரங்காய் வற்றல், இலை வடாம், ஜவ்வரிசி வடாம், சோற்று வடாம்… என்று விதவிதமான பொரித்துச் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளைக் கண்டுபிடித்தது நம் பாரம்பர்யம். அது உருளைக்கிழங்கையும் விட்டுவைத்திருக்காது என்றே நம்பலாம். ஆனால், ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகுதான் உருளைக்கிழங்கு இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கியது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான், `1853-ம் ஆண்டு, உருளைக்கிழங்கு சிப்ஸை ஜார்ஜ் க்ரம் (George Crum) என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார்’ என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உருளைக்கிழங்கு-சிப்ஸ்

ஜார்ஜ் க்ரம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கில், சாராடோகோ ஸ்ப்ரிங் ரிசார்ட்டில் ( Saratoga Springs) உள்ள மூன் லேக் லாட்ஜின் சமையல்கலை நிபுணர். அந்த ஹோட்டலுக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், கொஞ்ச நாட்களாக ஒரு புகார் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்… “என்னப்பா நீங்க வறுத்துக் குடுக்குற உருளைக்கிழங்கு கெட்டியா, தடிமனா இருக்கு, மெத்து மெத்துனு இருக்கு. சாப்பிடுற மாதிரி செஞ்சு தர மாட்டீங்களா?” இந்தப் புகார் ஜார்ஜை ஒருகட்டத்தில் எரிச்சலின் உச்சிக்கே கொண்டுபோனது. `இந்த ஆள் அடங்கவே மாட்டானா?’ என யோசித்தவர், அந்த வாடிக்கையாளருக்கு பாடம் கற்றுத்தர முடிவு செய்தார்.

அன்றைக்கு அந்த வாடிக்கையாளர் மூன் லேக் லாட்ஜுக்கு வந்திருந்தார். ஜார்ஜ், உருளைக்கிழங்கை எடுத்து எவ்வளவு மெல்லியதாக முடியுமோ, அவ்வளவு மெலிதான ஸ்லைஸ்களாகச் சீவினார். வழக்கமாகச் செய்வதுபோல உருளைக்கிழங்கை வறுக்காமல், வேண்டுமென்றே அப்பளம் மாதிரி உடைகிற பதத்துக்கு உருளைக்கிழங்கை பொரித்தெடுத்தார். அதில் உப்பைத் தூவினார். வாடிக்கையாளருக்குப் பரிமாறச் சொன்னார். அன்றைக்கு ஜார்ஜ் எதிர்பார்க்காதது நடந்தது. புது உருளைக்கிழங்கு வறுவல் அந்த வாடிக்கையாளருக்குப் பிடித்துப்போனது. புதுவகை ஸ்நாக்ஸாகப் பிறந்தது சிப்ஸ். அதன் பிறகு, 1860-ம் ஆண்டில், `க்ரம்ப்ஸ் ஹவுஸ்’ என்ற சொந்த ரெஸ்டாரன்ட்டை உருவாக்கும் அளவுக்கு ஜார்ஜ் சிப்ஸால் வளர்ந்தார்.

க்ரிஸ்ப்

ஜார்ஜ் சிப்ஸைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மேற்கத்திய நாடுகளில் அது இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1817-ம் ஆண்டு வெளியான சமையல் புத்தகம், `தி குக்ஸ் ஆரகிள்’ (The Cook’s Oracle). இதை வில்லியம் கிச்சனர் (William Kitchiner) என்பவர் எழுதியிருந்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் `பெஸ்ட் செல்லர்’ புத்தகம் வேறு. அந்தப் புத்தகத்திலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்ததற்கான குறிப்பு இருக்கிறது. ஆனாலும், ஆதாரபூர்வமாக ஜார்ஜ் க்ரம்தான் சிப்ஸைக் கண்டுபிடித்தவர் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்மேன் லே என்பவர், சிப்ஸை விற்பதற்கு புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்தார். சிப்ஸ்களை பாக்கெட்டுகளில் போட்டார். அதைத் தன் காரில் எடுத்துக்கொண்டுபோய் அவர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைக்காரர்களுக்குப் போட ஆரம்பித்தார். வியாபாரம் சூடுபிடித்தது. அது பிரபலமாகி அமெரிக்காவின் முதல் வெற்றிகரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பெனியாக லேய்’ஸ் (Lay’s) உருவானது. இது ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1932. இப்போது அமெரிக்காவில் `நேஷனல் பொட்டெட்டோ சிப்ஸ் டே’ எல்லாம் கொண்டாடுகிறார்கள்.

மொறு மொறு-சிப்ஸ்

இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது சிப்ஸ் வியாபாரம். கலர்கள் சேர்க்கப்பட்டு, பல பிராண்டுகளாக, லாபம் கொழிக்கும் தொழிலாகப் பரந்துவிரிந்திருக்கிறது. இன்று எண்ணற்ற பிராண்டுகள், விதவிதமான சுவைகள், ஒரு நாளைக்கு ஒன்று என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சிப்ஸுக்கான விளம்பரங்கள். எல்லாம் சரி… இதன் மொறு மொறு சுவைக்கு ஈடில்லைதான். உடல்நலத்துக்கு?

டயட்டீஷியன் பத்மினி சொல்கிறார்… “கடைகளில் விற்கப்படும் ஒரு சிறிய உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் (5 ரூபாய் பாக்கெட்) 160 கலோரிகள் உள்ளன. 10 கிராம் கொழுப்பு உள்ளது. சோடியம் 170 மி.கி., பொட்டாசியம் 350 மி.கி., கார்போஹைட்ரேட் 15 கிராம், சர்க்கரை 1 கிராம், புரோட்டீன் 2 கிராம், நார்ச்சத்து 1 கிராம் உள்ளன. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகள் சிப்ஸை குறைந்த அளவில் சாப்பிடுவது தவறில்லை. ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு இதில் உள்ள கலோரிகள் பயன் தருபவை. அதேபோல இதில் வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து, மக்னீசியம், நியாசின், வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் வளரும் குழந்தைகளுக்கு சக்தி அளிப்பவை. இது, நாவறட்சியை ஏற்படுத்தும் என்பதால், இதைச் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு அதிகமாகத் தண்ணீர் தரவேண்டியது அவசியம். டயட்டீஷியன் பத்மினி

சாதாரண மளிகைக்கடையிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடியது சிப்ஸ்; விலையும் அதிகம் இல்லை. ஆனால், இது நம் உடம்புக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதே உண்மை. அடிக்கடி அல்லது தினமும் சிப்ஸ் சாப்பிடுவது உடல்நலத்தை பாதிக்கும். இதில் இருக்கும் அதிக கலோரியும் கொழுப்பும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். `ஒபிசிட்டி’ என்ற உடல்பருமனுக்கு வழிவகுக்கும். உடல்பருமன் ஏற்பட்டால் சர்க்கரைநோய், இதயநோய்கள், புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. அதிக அளவில் சிப்ஸைச் சாப்பிடும்போது, நம்மால் மற்ற ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிட முடியாமல் போகும். அதனால் மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களும், கனிமங்களும் நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும். இதில் இருக்கும் சோடியம் நம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. அதிக அளவில் சோடியம் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது, உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். எனவே, இது பிற்காலத்தில் நமக்கு பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், மாரடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

இதில் உள்ள கொழுப்பு, நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடியது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சிப்ஸுகளுக்கு இந்தத் தன்மை அதிகம் உண்டு. அதோடு இதைப் பொரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய் எந்த வகை என்று நமக்குத் தெரியாது. திரும்பத் திரும்ப ஒரே எண்ணெயில் பொரித்து எடுத்த சிப்ஸைச் சாப்பிடுவது கொழுப்பைக்கூட்டும்; உடல்நலனுக்கு உகந்ததல்ல. குழந்தைகளோ, பெரியவர்களோ சிப்ஸுக்கு மாற்றாக வெஜிடபுள் சாலட், ஃப்ரூட் சாலட், சுண்டல் என ஸ்நாக்ஸ் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. எப்போதாவது சிப்ஸ் சாப்பிடுவது நம் உணவுப் பழக்கத்தை பாதிக்காது. தினமும் அல்லது தொடர்ந்து சாப்பிடுவது கூடாது. சிப்ஸில் இருந்து விலகியிருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு பலம் தரும்” – அக்கறையோடு சொல்கிறார் பத்மினி. shutterstock 232207759 19331

Related posts

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

nathan

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

nathan

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த ஒரு பொருள் வீட்டில் இருக்கும்போது நீரிழிவு வியாதி பத்தி கவலைப்படலாமா?

nathan

இந்துப்புவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்….!! இந்துப்பு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கும் அருமருந்தாகும்.

nathan

தினமும் பாதுகாப்பான உணவை சாப்பிடுவது நல்லது..!

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

சமையல் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனம் தேவை

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan