25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
252121 17012
ஆரோக்கிய உணவு

டானிக் சாப்பிடலாமா… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்?

இதய ஆரோக்கியம், மூளைத்திறன் மேம்பாடு, கிட்னி நலம், இரும்புச்சத்து… என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடைகளில் கிடைக்கிறது டானிக்! இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் `டானிக்’ வியாபாரம் சக்கைபோடுபோடுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. உடல்மீது லேசான அக்கறையும், உறுத்தலும், அதிகப் பயமும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த வியாபாரத்தின் இலக்கு. இப்போது பலரின் மாத மளிகைச் சாமான் பட்டியலில் உயிர்ச்சத்து மாத்திரைகளும், இரும்புச்சத்து டானிக்குகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இப்படி டானிக்காகச் சாப்பிடாமல், பயறுகள், காய்கறி, பழ வகைகளில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். சரி… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்? பார்க்கலாமா?

காய்கள்

எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்… இப்படிப்பட்ட ஒரு சூழலில் பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளையோ சத்து தரும் டானிக்குகளையோ வாங்கிச் சாப்பிடுவது தவறில்லை என்றுகூடத் தோன்றலாம். அவசியம் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் விளைவிக்கும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் சத்துகளை உடலுக்குக் கொடுப்பதுதான் சிறந்தது.

இரும்புச்சத்து

பலராலும் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப்படுவது இரும்புச்சத்து டானிக்தான். ரத்தசோகையைப் போக்க உதவும் அவசியமான இந்த டானிக், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரலில் பாதிப்பையும்கூட ஏற்படுத்திவிடும். `குழந்தைகளுக்கு அவசியமின்றி இரும்புச்சத்து டானிக் கொடுப்பது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்’ என எச்சரிக்கிறது நவீன மருத்துவம்.

நம் அன்றாட உணவில் ஏற்கெனவே இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. இந்தச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் சி சத்து தேவை. பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இரும்புச்சத்து கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால், கம்பு அரிசியில் இது அதிகமாக இருக்கிறது. குதிரைவாலி அரிசி, வரகு, சாமை ஆகியவற்றிலும் இது அதிகம். இந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதற்குச் சமமானது.
252121 17012
முருங்கை

முருங்கைக்கீரை சூப் அல்லது ரசம், நாட்டுக்கோழியின் ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்திலும் இரும்புச்சத்து உண்டு. இவற்றையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் இரும்புச்சத்துக்கு என தனியாக டானிக்கோ, மருந்தோ வாங்கிச் சாப்பிடத் தேவையில்லை.

துத்தநாகச்சத்து (Zinc)

குழந்தைகளுக்கான சத்து டானிக்குகளில் வெகு பிரபலமானது நாகச்சத்து. இது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்; புற்றுநோயைத் தடுக்கும்; ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நாகச்சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம்பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது.
shutterstock 116265958 17346
தர்பூசணி

பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது அல்லது சமைக்கும்போது அவற்றின் விதைகளைத் தூர எறிந்துவிடக் கூடாது. அவற்றை எடுத்து, உலர்த்தி வைத்து அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், நாகச்சத்து தாராளமாகக் கிடைக்கும். `இப்படி இயற்கையாகக் கிடைக்கும் உணவில் சாப்பிடாமல், டானிக்காக வாங்கி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு சளிப்பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும்’ என எச்சரிக்கிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.

வைட்டமின் ஆபத்து!

வைட்டமின்கள், மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சோர்வு நீங்க வேண்டும், தோல் மினுங்க வேண்டும், மூளைத்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மூன்று வேளையும் இஷ்டத்துக்கு வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுவது உயிர்ச் சத்தாகாமல், உயிருக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிடும். அளவுக்கு அதிகமான `ஃபோலிக் அமிலம்’ எனும் வைட்டமின் பி9, மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி சத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், சிறுநீர்ப்பை புற்று வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த இரு வைட்டமின்களையும் இயற்கையாக அளவோடு சாப்பிட்டால், புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.
juice1 17500

புரதச்சத்துமிக்க பானமோ, மூளைக்கு பலம் தரும் டானிக்கோ சத்துக்களை மருந்தாகச் சாப்பிட வேண்டாம். எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவற்றைச் சாப்பிடுவோம். உடல்நலத்தை என்றென்றும் நம் வசப்படுத்துவோம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வெங்காயத்தை அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

nathan

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

nathan

காலையில் வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika

இரவில் பட்டினி கிடந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும்..!

nathan