நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் நிறைந்துள்ளன. என்ன தான் அந்த பூச்சிக் கொல்லிகள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கவும், செடிகள் நன்கு செழித்து வளரவும் அடிக்கப்பட்டாலும், அந்த இரசாயன பூச்சிக்கொல்லிகள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிலும் இப்படி பூச்சிக்கொல்லிகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால், அதனால் புற்றுநோய், நரம்பு மண்டல சிதைவு, இனப்பெருக்க மண்டல பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலமே பாதிக்கப்படும். மேலும் என்ன தான் அவற்றை நீரில் நன்கு கழுவி பயன்படுத்தினாலும், அவற்றில் உள்ள இரசாயனங்கள் போனபாடில்லை.
ஆனால் அவற்றில் உள்ள பூச்சிக்கொல்லிகள் நீங்க, அவற்றை முறையாக கழுவி பயன்படுத்த வேண்டும். அதற்கு வினிகர் நீர், உப்பு நீர் அல்லது புளி நீர் தான் சிறந்தவை. சரி, இப்போது எந்த காய்கறியை எப்படி கழுவினால், அவற்றில் உள்ள பூச்சிக்கொல்லி ரசாயங்கள் முற்றிலும் நீங்கும் என்று பார்ப்போம்.
கறிவேப்பிலை, புதினா, கீரைகள்
கீரை வகைகள், புதினா, கறிவேப்பிலையை சமைக்க பயன்படுத்தும் முன், அவற்றை வினிகர் நீரில் நன்கு அலசி, பின் பயன்படுத்த வேண்டும். இதனால் கீரைகள், கறிவேப்பிலை, புதினா போன்றவற்றில் உள்ள இரசாயன பூச்சிக் கொல்லிகள் முற்றிலும் அகலும்.
புடலங்காய், கோவைக்காய் மற்றும் நெல்லிக்காய்
மேற்கூறிய காய்கறிகளை வினிகர் நீர் அல்லது புளி நீரில், 10 நிமிடம் ஊற வைத்து, சுத்தமான துணியால் துடைத்து, பின் சமைக்கப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள இரசாயனங்கள் முற்றிலும் நீங்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியின் வேரை முற்றிலும் நீக்கி, பின் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க வேண்டும். பின் சமைக்க பயன்படுத்தும் முன், அவற்றை வினிகர் நீரிலோ அல்லது உப்பு நீரிலோ அலசி, பின் சுத்தமான நீரில் 2-3 முறை நன்கு அலசிப் பயன்படுத்த வேண்டும்.
முட்டைக்கோஸ் முட்டைக்கோஸின்
மேல் பகுதியில் இருக்கும் இதழ்களில் 3-4 இதழ்களை நீக்கிவிட்டு, பின் உப்பு நீரில் கழுவிவிட்டு, அடுத்து சுத்தமான நீரில் பலமுறை கழுவி, துணியால் துடைத்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் அவற்றில் உள்ள இரசாயனங்கள் முற்றிலும் நீங்கிவிடும்.
கத்திரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், சுரைக்காய
் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சமைக்கும் முன், பிரஷ் கொண்டு மேல் பகுதியை நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் புளி அல்லது வினிகர் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, அடுத்து சுத்தமான நீரில் மீண்டும் கழுவி, நல்ல சுத்தமான துணியால் துடைத்து பின் பயன்படுத்த வேண்டும்.
தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரைக்காய்
மேற்கூறிய காய்கறிகளை வாங்கியவுடன் வினிகர், உப்பு அல்லது புளி நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் பலமுறை கழுவி, இரவில் அப்படியே வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சுத்தமான துணியால் துடைத்து பின் பயன்படுத்துங்கள். இதனால் அவற்றில் உள்ள இரசாயனங்கள் நீங்கும்.
காலிஃப்ளவர்
பலருக்கும் காலிஃப்ளவரை சுத்தம் செய்ய பயமாக இருக்கும். ஏனெனில் அவற்றில் புழுக்கள் இருக்கும் என்பது தான். இருப்பினும் இதனை ஆரோக்கியமானதாக மாற்றி சாப்பிட, முதலில் அதன் பூக்களை ஒவ்வொன்றாக வெட்டி, உப்பு அல்லது வினிகர் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பலமுறை சுத்தமான நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.
கேரட், பீட்ரூட்
இந்த காய்கறிகளை முதலில் சுத்தமான நீரில் பலமுறை கழுவி, பின் துணியால் துடைத்து, காட்டன் துணியால் சுற்றில் ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்கும் முன், அவற்றின் மேல் தோலை சீவி எடுத்துவிட்டு, பின் மீண்டும் நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.
பூண்டு, இஞ்சி, வெங்காயம்
மேற்கூறியவைகளின் மேல் தோலை நீக்கிவிட்டு, சுத்தமான நீரில் கழுவி பின் பயன்படுத்த வேண்டும்.
வினிகர் நீர் தயாரிக்கும் முறை
ஒரு லிட்டர் நீரில், 20 மி.லி. வினிகரைக் கலந்தால், வினிகர் நீர் தயார்.
புளி நீர் தயாரிக்கும் முறை
30 கிராம் புளியை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற வைத்து, பின் அதனை கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
உப்பு நீர் தயாரிக்கும் முறை
1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் கல் உப்பை சேர்த்து கலந்தால், உப்பு நீர் ரெடி!