28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1
சிற்றுண்டி வகைகள்

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

உடலுக்குத் தேவையான சத்துக்களின் சுரங்கங்களாக விளங்கும் சிவப்பு அரிசி, கறுப்பு அரிசியை ஒதுக்கி வைத்துவிட்டு, சத்துக்கள் நீக்கப்பட்ட வெள்ளை அரிசியை சாப்பிடுவதால்தான், நம் நாட்டில் சர்க்கரை நோய் நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று உணவியலாளர்கள் ஒலித்து வரும் அபாய மணி, காதில் விழாதது போல்… ஃபைன், சூப்பர் ஃபைன் என்று பாலிஷ் மேல் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை சாப்பிடும் போக்குதான் இன்னமும் தொடர்கிறது. இதற்காகவே… இந்த இணைப்பிதழில், சுவையான 30 வகை சிவப்பு அரிசி. சிவப்பு அரிசி அவல், கறுப்பு அரிசி சமையல் அயிட்டங்களை வழங்கி உங்கள் ஆரோக்கியத்துக்கு பலமான அஸ்திவாரம் போடும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்,

”ஹெல்தி ஃபேமிலி என்கிற நிறைவு உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கட்டும்” என்று வாழ்த்துகிறார்.

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், துருவிய வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

1

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேகவிடவும் (தண்ணீர் அளவு: ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு). வெந்ததும் இறக்கி நன்கு மசித்து, அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்… நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.

சிவப்பு அரிசி பகளாபாத்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், தயிர் – அரை கப், பால் – 2 கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், ஆப்பிள் துண்டுகள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

2

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் 2 கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்து வேகவிடவும். வெந்த சாதத்தை மசித்துக் கொள்ளவும். அதை சிறிது ஆறவிட்டு, அதனுடன் தேவையான உப்பு, அரை கப் தயிர், ஒரு கப் பால் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை தாளித்து சேர்க்கவும். பிறகு, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையானவை: சிவப்பு புட்டரிசி மாவு – ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

3
செய்முறை: சிவப்பு புட்டரிசி மாவில் தண்ணீர் தெளித்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் அதில் நெய் சேர்த்துப் பிசிறவும். புட்டுக் குழாயில் மாவு, சர்க்கரை, தேங்காய் துருவல் என்ற வரிசையில் நிரப்பவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுத்தால், சுவையான குழாய்ப்புட்டு தயார்.

சிவப்பு அரிசி காரப் புட்டு

தேவையானவை: சிவப்பு புட்டரிசி மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, எலுமிச்சம் பழம் – அரை மூடி, கறிவேப்பிலை, இஞ்சி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை, தேங்காய் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

4

செய்முறை: சிவப்பு புட்டரிசி மாவில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும். ஆவியில் வெந்த புட்டு சேர்த்துக் கிளறவும். பிறகு, கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, தேங்காய் துருவல் தூவி, கிளறிப் பரிமாறவும்.

சிவப்பு அரிசி தோசை

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

5

செய்முறை: சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறவும்.

சிவப்பு அரிசி பழப் பணியாரம்

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், வாழைப்பழம் – 2, பொடித்த வெல்லம் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு.

[imghttp://img.vikatan.com/aval/2013/04/ywvlnj/images/6.jpg[/img]

செய்முறை: சிவப்பு அரிசி மாவு, கோதுமை மாவு, வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

சிவப்பு அரிசி காரப் பணியாரம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

7

செய்முறை: சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் ஊறவிடவும். 3 மணி நேரம் கழித்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

சிவப்பு அவல் உப்புமா

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

8

செய்முறை: சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வேக வைத்த முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ளலாம்).

சிவப்பு அவல் வெஜ் கிச்சடி

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், கேரட், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பீன்ஸ் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, வேக வைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், காலிஃப்ளவர் – 10 பூக்கள் (நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்), பட்டை – சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

9

செய்முறை: சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து… வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊற வைத்த அவல், கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

சிவப்பு அவல் ஸ்வீட்

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி, திராட்சை, பாதாம் – தேவையான அளவு, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சக்கரை – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

10

செய்முறை: சிவப்பு அவலை 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு அவலுடன் முந்திரி, பாதாம், திராட்சை, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சக்கரை, தேங்காய் துருவல் சேர்த்துப் பிசிறவும். இதனுடன் நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும் (விருப்பப்பட்டால், வாழைப் பழம் அல்லது ஆப்பிள் துண்டுகள் சேர்க்கலாம்).

மாலை நேரத்துக்கு ஏற்ற எளிய சிற்றுண்டி இது.

சிவப்பு அவல் தோசை

தேவையானவை: சிவப்பு அவல், தோசை மாவு – தலா ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

11

செய்முறை: சிவப்பு அவலை 15 நிமிடம் ஊற வைத்து, தோசை மாவுடன் கலக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

சிவப்பு அவல் வடை

தேவையானவை: சிவப்பு அவல், உளுந்து – தலா ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – கால் டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

12

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, உளுந்துடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, மிளகு சேர்த்து வடை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அவலை 15 நிமிடம் ஊற வைத்து, மாவில் கலக்கவும். இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சிவப்பு அரிசி பாயசம்

தேவையானவை: சிவப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பாதாம் – 10 (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை – தேவையான அளவு.

13

செய்முறை: சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.

இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

சிவப்பு அவல் லட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், முந்திரி – 20, நெய் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

14
செய்முறை: சிவப்பு அவலை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். இதை ஆறவிட்டு, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பொடித்த அவல், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். நெய்யைச் சூடாக்கி, தேவைக்கேற்ப ஊற்றி, உருண்டைகளாகப் பிடித்தால்… சிவப்பு அவல் லட்டு ரெடி.

குறிப்பு: உடனடியாக பயன்படுத்துவதானால், நெய்க்குப் பதில் பால் விட்டு லட்டு பிடிக்கலாம்.

சிவப்பு அரிசி ஆப்பம்

தேவையானவை: சிவப்பு அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சாதம் – அரை கப், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, – தேங்காய்ப் பால், சர்க்கரை, உப்பு – தேவையான அளவு.

15

செய்முறை: சிவப்பு அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நன்கு மையாக அரைக்கவும். சாதத்தையும் சேர்த்து அரைக்கவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 10 மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பம் ஊற்றுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆப்பசோடா சேர்த்துக் கலக்கவும். பிறகு ஆப்பச் சட்டியை சூடாக்கி, மாவை ஊற்றி மூடி, ஆப்பம் சுட்டெடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஆப்பத்துடன் பரிமாறவும்.

சிவப்பு அரிசி பொங்கல்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

16

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் அரிசி, பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். பிரஷர் அடங்கியதும்… வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

சிவப்பு அரிசி அடை

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒன்றரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து – கால் கப், மிளகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், மிகவும் சிறியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 10, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

17

செய்முறை: அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே 4 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அவற்றை ஒன்று சேர்த்து மிளகு, சீரகம், சோம்பு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

சிவப்பு அரிசி ஊத்தப்பம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெங்காயம் – ஒன்று, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

18

செய்முறை: சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு, தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு… மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

சிவப்பரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், முதல் தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், பூண்டு – 15 பல், சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், சுக்கு – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

19

செய்முறை: சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.

சிவப்பு அரிசி கொழுக்கட்டை (யாழ்ப்பாண கொழுக்கட்டை)

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப், சர்க்கரை, உப்பு – தேவையான அளவு.

20

செய்முறை: சிவப்பு அரிசி மாவுடன் உப்பு, தேவையான சுடுநீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் தயார் செய்யவும். மாவை சொப்பு போல் செய்து, பூரணத்தை உள்ளே வைத்து, கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால், யாழ்ப்பாண கொழுக்கட்டை ரெடி.

சிவப்பு அரிசி பால் கொழுக்கட்டை

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பால் – 2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

21

செய்முறை: சிவப்பு அரிசி மாவுடன் உப்பு, சுடுநீர், தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அதை சிறுசிறு உருண்டைகளாக (கோலி அளவு) உருட்டி வைக்கவும். ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். அதில் உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு கப் பாலில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வெந்த உருண்டைகளுடன் சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

சிவப்பு அரிசி – தேங்காய்ப் பால் அல்வா (தொதல்)

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – 4 கப், சர்க்கரை – இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு.

22

செய்முறை: தேங்காய்ப் பாலில் சிவப்பு அரிசி மாவை கட்டியில்லாமல் கலந்து, கடாயில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு அதனுடன் தேவையான சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். ஒட்டாத பதம் வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

சிவப்பு அரிசி வடகம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

23

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் உற வைக்கவும். பிறகு மூன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த சாதத்துடன் உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுத்தால்… வடகம் ரெடி.

கறுப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: கறுப்பு அரிசி (கவுனி அரிசி) – ஒரு கப், சர்க்கரை, தேங்காய் துருவல் – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

24

செய்முறை: கறுப்பு அரிசியை சுத்தம் செய்து, 3 டம்ளர் தண்ணீரில் 2 அல்லது 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதே நீருடன் குக்கரில் வேகவிடவும். 2 விசில் வந்ததும் ‘சிம்’மில் 10 நிமிடம் வைக்கவும். பின்னர் இறக்கி, வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் சேர்த்துக் கிளறவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கலாம்.

கறுப்பு அரிசி கீர்

தேவையானவை: கறுப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன், பால் – 4 கப், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பாதாம் – 5 (துருவிக் கொள்ளவும்).

25

செய்முறை: கறுப்பு அரிசியை மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். பிறகு, பாலை கொதிக்க வைத்து, உடைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும். பால் பாதியாக குறுகும்போது சர்க்கரையை சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்தால்… கறுப்பு அரிசி கீர் தயார்.

இதை சூடாகவோ, குளிர வைத்தோ பருகலாம்.

கறுப்பு அரிசி தோசை

தேவையானவை: கறுப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

26

செய்முறை: கறுப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு எடுத்து அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை புளிக்க வைக்கவும் (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்). தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

கறுப்பு அரிசி ரொட்டி

தேவையானவை: கறுப்பு அரிசி மாவு – ஒரு கப் (கறுப்பு அரிசியை ஊற வைத்து, நிழலில் காய வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

27

செய்முறை: அடுப்பில் தேவையான தண்ணீரை சூடாக்கி, அதில் உப்பு, எண்ணெய், பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கறுப்பு அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, அதில் சிறிது எண்ணெய் விடவும். மாவை சிறு உருண்டையாக எடுத்து வட்ட வடிவமாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

காய்கறி குருமா, கார சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

கறுப்பு அரிசி பிஸ்கட்

தேவையானவை: கறுப்பு அரிசி மாவு, மைதா – தலா கால் கப், பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – அரை கப், நெய் – தேவையான அளவு.

28

செய்முறை: கறுப்பு அரிசி மாவு, மைதா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு நெய் சேர்த்துப் பிசையவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது). இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாகத் தட்டவும். ‘மைக்ரோவேவ் அவன்’-ல் உள்ள பேக்கிங் டிரேயில் வட்டமாக தட்டி வைத்தவற்றை அடுக்கி, 180 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் 10-15 நிமிடம் ‘பேக்’ செய்தால்… பிஸ்கட் ரெடி.

கறுப்பு அரிசி லட்டு

தேவையானவை: கறுப்பு அரிசி மாவு, பச்சைப் பயறு மாவு – தலா கால் கப், சர்க்கரை – அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – உருண்டை பிடிக்க தேவையான அளவு.

29

செய்முறை: கறுப்பு அரிசி மாவு, பச்சைப் பயறு மாவைத் தனித்தனியே வாசம் வரும் வரை வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, அவற்றுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். பின்னர், சூடான நெய் ஊற்றி, பிசிறி உருண்டைகளாகப் பிடித்தால்… கறுப்பு அரிசி லட்டு தயார்.

கறுப்பு அரிசி பழ புட்டிங்

தேவையானவை: கறுப்பு அரிசி – ஒரு கப், பால் – 3 கப், ஆப்பிள் – ஒன்று, வாழைப்பழம் – 2, வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன், சைனா கிராஸ் (கடல் பாசி) – 10 கிராம், சர்க்கரை – அரை கப்.

30
செய்முறை: கறுப்பு அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த அரிசியுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். ஆப்பிள், வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கவும். சைனாகிராஸை சுடுநீரில் 15 நிமிடம் போட்டு வைத்து, பிறகு அதை எடுத்து, அரிசி – பழக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து, எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: உடலுக்கு நன்மை விளைவிக்கும் சிவப்பு அரிசி, கறுப்பு அரிசியை சாதமாக வடித்து குழம்பு, ரசம், தயிருடன் சாப்பிடலாம். இவை வேக அதிக நேரம் பிடிக்கும் என்பதால்… ஒரு கப் அரிசிக்கு 3 (அ) 4 கப் நீர் சேர்த்து, 2 (அ) 3 மணி நேரம் ஊற வைத்து சாதமாக வடிக்கலாம். அரிசியை முதலிலேயே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஊற வைத்த தண்ணீருடனேயே அரிசியை சாதமாக வடிக்க வேண்டும்.

Related posts

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

காரா ஓமப்பொடி

nathan

ப்ராக்கோலி கபாப்

nathan

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

போளி

nathan

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan