இறைச்சி இல்லாத உணவில்லையெனில் இறந்துவிடும் அளவிற்கு துயரம் கொள்ளும் நபர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து. சாதாரணமாக வாரத்தில் ஓரிரு முறை இறைச்சி உணவை சாப்பிடுவது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக இருக்கும்.
ஆனால், ஒரு சில ஜீவராசிகள் வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களுமே தங்களுக்கு இறைச்சி உணவு வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது ஜுராசிக் பார்க்கில் டைனோசரைக் கட்டுப்படுத்துவதற்கு சமம்.
உணவுக் கட்டுப்பாடு என்று வந்தவுடன், முதலில் அனைவரும் ஒதுக்க சொல்லும் உணவு, இறைச்சி தான். சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி என எதையும் கையில் தொடவேக் கூடாது என்று தடைச்சட்டம் பிறப்பிக்கப்படும்.
உடல் எடைக் குறையும்
நீங்கள் இறைச்சி உணவைத் தவிர்க்கும் போது, முதலில் ஏற்படும் மாற்றம் உடல் எடைக் குறைவு தான். குறைந்தது 3 – 4கிலோ வரை உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதற்கென்று, சைவ உணவுகளை மூக்குப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு, "எங்க ஒன்னும் மாறலையே.. குறையலையே?" என்றுக் கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.
இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு
சைவம், அசைவம் சாப்பிடுவோர் மத்தியில், அன்றாட வாழ்க்கைமுறையை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடும் நபர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ருசியில் மாற்றம்
நீங்கள் திடீரென இறைச்சி உணவுகளை கைவிட்டு முற்றிலுமாக சைவ உணவுகளுக்கு மாறும் போது, ருசியில் பெரும் மாற்றத்தை உணர்வீர்கள். ஏதோ பத்திய சாப்பாட்டை சாப்பிடுவது போல இருக்கும். இதன் காரணமாக தான், இறைச்சியை ஓரிரு நாட்களுக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்த முடியாமல், மீண்டும் இறைச்சி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள் அசைவ பிரியர்கள்.
தசை வலிமை
தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இறைச்சி மற்றும் முட்டைகளில் புரதச்சத்து மிகுதியாக இருக்கின்றது. எனவே, நீங்கள் இறைச்சி உணவுகளை கைவிடும் போது, அதற்கேற்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், தசைகளின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.
உடல் சூடு குறையும்
பெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் இறைச்சி உணவை கைவிடும் போது, உடல் சூடு குறையும். உடல்நிலையில் இலகுவான நல்ல மாற்றம் காண இயலும்.
செரிமானம் சீராகும்
இறைச்சி உணவுகள் கடின உணவு வகையை சார்ந்தவை. எனவே, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால், நீங்கள் இறைச்சி உணவை தவிர்க்கும் போது, செரிமானம் சீராகும்.
சத்தான உணவு
புரதம், இரும்பு, போன்ற உடல் வலிமைக்கு தேவையான சத்துகள் இறைச்சியில் மிகுதியாக கிடைக்கும். எனவே, நீங்கள் இறைச்சியை கைவிடும் போது, ரசம், சாம்பார் மட்டுமில்லாமல், அதற்கேற்ற சத்தான சைவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம்.