உப்பு உணவின் சுவையை அதிகரித்து காட்டும். ஆனால் அப்படி உப்பு அதிகம் உள்ள உணவை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால், பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிலும் உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் அன்றாடம் சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவில் எடுத்தாலோ, இரத்த அழுத்தம் அதிகரித்து, அதனால் பக்கவாதம் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே ஜங்க் உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். இங்கு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
பிரட் மற்றும் ரோல்ஸ்
ஒரு துண்டு பிரட்டில் 230 மி.கி சோடியம் உள்ளது. இத்தகைய பிரட்டை தினமும் மூன்று வேளை உட்கொண்டு, அதோடு மற்ற உணவுகளையும் உட்கொள்வதால், ஒரு நாளைக்கு எவ்வளவு சோடியம் உங்கள் உடலில் சேர்கிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்
தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரீசரில் இறைச்சிகள் விற்கப்படுகிறது. இதனால் கறி கடைக்கு சென்று இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடும் பழக்கம் குறைந்து, கடைகளில் விற்கப்படும் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை வாங்கி பலர் சாப்பிடுகின்றனர். இப்படி உறைய வைக்கப்படும் இறைச்சிகளில் 1,050 மி.கி சோடியம் உள்ளது.
பிட்சா
ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்யும் பலரும் சாப்பிடும் ஒரு ஜங்க் உணவு தான் பிட்சா. இந்த பிட்சாவின் ஒரு துண்டில் 760 மி.கி சோடியம் உள்ளது. அப்படியெனில் நீங்கள் எவ்வளவு சோடியம் எடுக்கிறீர்கள் என்று சற்று நினைத்துப் பாருங்கள்
சூப்
கடைகளில் விற்கப்படும் ஒரு பௌல் சூப்பில் சராசரியாக 940 மி.கி சோடியம் உள்ளது. எனவே கடைகளில் விற்கப்படும் சூப்பை அளவுக்கு அதிகமாக பருகுவதைத் தவிர்க்கவும்.
சாண்ட்விச்
சாண்ட்விச்சுகளில் பிரட், இறைச்சிகள், உப்புள்ள சீஸ் சேர்க்கப்படுவதால், இவற்றில் சொல்ல முடியாத அளவில் சோடியம் நிறைந்துள்ளது. எனவே சாண்ட்விச் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
சிப்ஸ்
பலரும் தங்களின் அலுவலக டிராயரில் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வைத்து, எப்போதும் கொறித்தவாறு இருக்கின்றனர். இப்படி கொறிக்கும் சிப்ஸ்களிலும் அளவில்லாமல் சோடியம் நிறைந்துள்ளது. எனவே சிப்ஸ் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நூடுல்ஸ்
விரைவில் தயாராகும் ஒரு உணவுப் பொருள் தான் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸில் சோடியம் மட்டுமின்றி, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அஜினமோட்டோவும் அதிகம் உள்ளது. எனவே ஒவ்வொருவரும் இதனை தங்களின் டயட்டில் இருந்து நீக்க வேண்டும்.