உடல் எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமா என்றால் இல்லை, எந்த ஒரு வேலையும் நமது செயல்பாடு மற்றும் முயற்சியின் முடிவில் தான், அது எளிதாகவும், கடினமாகவும் மாறுகிறது. "ஆடாம ஜெயிச்சோமடா…." என்பது போல நம்மில் பெரும்பாலானோர் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம்.
இதனால், உடல் வேலை என்பது குறைந்து, உடல் எடை குறைப்பதற்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். சாதரணமாக வேலை செய்பவர்கள் எடுக்கும் அதே உணவுக் கட்டுப்பாடு பயிற்சிகள், உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு அதே பலனை அளிக்காது.
எனவே, நீங்கள் உங்கள் உணவில் நல்ல அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எந்தெந்த நேரத்திற்கு எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொண்டால் நல்லது என நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்….
காலை எழுந்ததும
் காலை எழுந்ததும் பாதாம், வால்நட்ஸ், பூசணி விதைகள், போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் நிறைய நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு மற்றும் புரதம் இருக்கிறது. மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
காலை உணவு
அலுவலகம் செல்வோரில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறே, காலை உணவை தவிர்ப்பது தான். எனவே, காலை வேளைகளில், வேக வைத்த வெள்ளை முட்டை, பழங்கள், வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். இந்த உணவுகளில் கொழுப்பு மிகவும் குறைவு, இதனால் அதிகம் சதைப் போடாமல் பார்த்துக்கொள்ள இயலும்.
டீ/ காபி
சிலர் டீ / காபி போன்றவை உடல்நலத்திற்கு கேடு என்பார்கள், சிலர் நன்மை என்பார்கள். அளவாக எடுத்துக்கொள்வது தான் நல்லது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இவை இரண்டும் விதிவிலக்கு அல்ல. ஆயினும், கிரீன் டீ குடிப்பது நல்லது, இதில் இருக்கும் அன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், செரிமானத்திற்கும் நல்லதாகும்.
மதிய உணவு
மதிய வேளைகளில் நீங்கள் சாப்பிடும் உணவினை விட முக்கியம், நீங்கள் சாப்பிடும் நேரம், 1 – 2 மணிக்குள் மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முடிந்த வரை முற்றிலும் வறுத்த உணவுகளை தவிர்த்திடுங்கள். ஒரு கப் சாதத்துடன் சாம்பார் அல்லது தால் உணவு, வேக வைத்த காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. அல்லது தானியங்களை சேர்த்துக் கொள்வது நல்ல பயன் தரும். ஏனெனில், தானியங்களில் கெட்டக் கொழுப்புசத்து இல்லை.
இடைவேளை உணவுகள்
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உட்கொள்வுதல் (அளவாக), உங்கள் மூளையை சீரான முறையில் இயங்க உதவுமாம். இடைவேளையில் / மாலை வேளைகளில் கொழுப்பு நீக்கிய பால், வேர்கடலை, ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவை எடுத்துக் கொள்வது நல்லது. மிக முக்கியமாக நொறுக்கு தீனிகள் மற்றும் இன்ஸ்டன்ட் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இரவு உணவு
பெரும்பாலானோர் நாள் முழுதும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்துவிட்டு, இரவு வேலை நன்கு சாப்பிட்டுவிடுவார்கள், இதற்கு நீங்கள் நாள் முழுதுமே நன்கு சாப்பிட்டிருக்கலாம். மற்றும் கொழுப்புசத்து, கார்போ-ஹைட்ரேட் குறைவான உணவுகள் தேர்ந்தெடுங்கள். பழங்களை போன்ற எளிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. இது, செரிமானத்திற்கு உதவும்.
நேரம்
இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவருந்த வேண்டியது அவசியம். இது, செரிமானம் மற்றும் உடல் எடைக் கூடாமல் இருக்க உதவும். முடிந்தால் ஓர் 10 நிமிடங்கள் சாப்பிட்ட பிறகு வாக்கிங் கூட சென்று வரலாம்.
ஆலோசனை அவசியம்
ஒவ்வொருவரின் உடல்நிலையை சார்ந்து உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எனவே, உங்கள் உடல்நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.