தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கிறேன். சில நாட்களில் நெல்லிக்காய் சாறும் குடிக்கிறேன். இதனால் பற்களுக்கு பாதிப்பு ஏதும் வருமா?
வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது நெல்லிக்காய் சாறு அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் “சி’, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் இச்சாறுகள் அவசியமானவை. வைட்டமின் “சி’ சத்து ஈறுகளை பன்மடங்கு பலப்படுத்தும் சக்தி கொண்டது. தேனில் உள்ள நற்குணங்கள் வாயை சுத்தமாக வைக்க உதவும். இவற்றை காலையில் அருந்துவதில் தவறு இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை பலர் மறந்து விடுகின்றனர். அதாவது இந்த சாறுகளில் அமிலத்தன்மை குறிப்பிடும் அளவிற்கு உள்ளது. இவை பற்களின் எனாமலை அரிக்கக் கூடியவை. இதற்காக பயப்படத் தேவையில்லை. எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து குடித்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது அந்தச் சாறுகள் பற்களின் மேல் அதிக நேரம் தங்காமல் தடுக்கும். இதனால் பற்களும் தேயாமல் இருக்கும். ஏற்கனவே பல் தேய்மானத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ பல் கூச்சம் உள்ளவர்கள், இதுபோன்ற சாறுகளை குடிக்க முடியாமல் அவதிப்படுவர். இவற்றை அருந்துவதை நிறுத்த தேவையில்லை. கூச்சத்திற்கான சிகிச்சையை செய்து விட்டு, பின் இச்சாறுகளை குடிக்கலாம். பற்களும், ஈறுகளும் ஆரோக்கியமாக இருந்தால், இதுபோன்ற நன்மைதரும் சாறுகளை எந்த தடையும் இன்றி காலையில் அருந்தலாம்.
என் கீழ்த்தாடை கோணலாக உள்ளது. சிரிக்கும்போது கீழ்பற்களும், மேல் பற்களும் ஒரே வரிசையில் இல்லை. இது பற்களால் ஏற்படுமா அல்லது தாடை எலும்பில் பிரச்னையா? இதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்?
கீழ்ப்பற்களும், மேல் பற்களும் பொதுவாக நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதில்லை. நம்மில் பலருக்கு அப்படி இருந்தும் அது வித்தியாசமாக தெரியாது. ஒரு அளவுக்கு மேல் இவை மாறி இருக்கும் போது, பார்க்க பற்கள் மிக கோணலாக இருப்பது போல தோற்றமளிக்கும். இதுபற்கள் மற்றும் தாடை எலும்பு இரண்டையும் சார்ந்து அமையும். வளரும் வயதில் ஏற்படும் ஒரு சில உடல் உபாதைகளால் தாடை எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். தாடை எலும்பில் கட்டி இருந்தாலும் அந்தப்பகுதியின் வளர்ச்சி மற்ற பகுதிகளைவிட கம்மியாக இருக்கும். பல் சீரமைப்பிற்காக கம்பி போடும் சிகிச்சை செய்தவர்கள் சிகிச்சை காலம் முடிந்த பின், சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் பற்கள் கோணலாக மாறும். இதனை பல் மற்றும் முகசீரமைப்பு நிபுணர்களின் உதவியுடன் சரியான முறையில் சரிசெய்ய வேண்டும். பற்களுக்கு தாடை எலும்பில் இடம் இல்லாமல் போகும் போதோ, ஒரு சில பற்கள் முளைக்காமல் இருந்தாலோ பற்கள் சீராக இருக்காது. முதலில் பற்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, சிலகாலம் கழித்து தாடை எலும்பையும் சேர்த்து பரிசோதனை செய்ய வேண்டும். பின்னர் தாடை எலும்பினையும் சேர்த்து சீரமைக்கும் சிகிச்சை செய்ய வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்தால் எளிதில் சரிசெய்துவிடலாம்.