காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தில் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான வடிவில் ஏதேனும் சிறு வெண்புள்ளியோ, கரும்புள்ளியோ, கட்டியோ வந்திருந்தால் உடனே பதறிப் போகிறோம். இணையத்தில் காரணம் தேடுகிறோம். டாக்டரிடம் ஓடுகிறோம். அதுவே நகங்களில் ஏற்படுகிற மிகப்பெரிய மாற்றங்களைக்கூட அலட்சியமாக விடுகிறோம்!
ஆரோக்கியமின்மையின் அறிகுறிகளை பல நேரங்களில் நகங்களும் உணர்த்தலாம்” என்கிறார் நகங்கள் மற்றும் சருமநோய் நிபுணர் ரவிச்சந்திரன்.
நம் நாட்டில் நகப்புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாக இருந்தாலும், சருமத்தைத் தாக்கும் அனைத்துவிதமான புற்றுநோய்களும் கை மற்றும் கால் விரல் நகங்களையும் தாக்கக்கூடியது. நகங்களுக்கு அடியில் உள்ள சதைப்பகுதியில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் கட்டியின் வெளிப்பாடாக நகத்தின் மேலே கோடு போலத் தோன்றலாம்.
ஆரம்பத்தில் பழுப்பு நிறத்தில் மெல்லிய கோடுகளாக தோன்ற ஆரம்பித்து பின்னர் அடர்நிறத்தில் தடிமனாக மாறும். இந்த சதைப்பகுதியை பயாப்சி சோதனை செய்து புற்றுநோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவோம். சருமத்தில் ஏற்படுவது போலவே நகத்திலும், மெலனோமா (Melanoma) என்று சொல்லக்கூடிய சருமப்புற்று வர வாய்ப்புண்டு. பெரும்பாலான நேரங்களில் உடலில் உண்டாகும் வைட்டமின் அல்லது மினரல் பற்றாக்குறைகளாலும் இதுபோல கோடுகள் தோன்றலாம்.
காலில் இடித்துக் கொள்வதாலும், கடினமான பொருட்களை தூக்கி வேலை செய்யும்போது விரல்மேல் விழுவதாலும், இயந்திரங்களில் வேலை செய்பவர்களுக்கும் இந்தக் கோடுகள் வரும். இவர்கள் கைகளுக்கும் கால்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது அவசியம். வீட்டில் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்யும் பெண்களுக்கு நகங்கள் ஊறிவிடுவதால் பூஞ்சை தொற்று ஏற்படும். இவர்கள் கைகளில் உறைகள் அணிந்து கொள்வதும் அவசியம்.
உலோகங்கள் மற்றும் நச்சுப்பொருட்கள் ரத்தத்தில் கலந்திருப்பதையும் நகங்களில் தோன்றும் நிறம் மற்றும் அமைப்பு மாற்றங்கள் உணர்த்துகின்றன. ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிறுநீரகச் செயலிழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் உடலில் உள்ள பிற ஆபத்தான நோய்களின் காரணமாகவும் நகங்களில் மாறுபாடுகள் தோன்றுகின்றன. எந்த ஒரு மாற்றத்தையும் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவர்களிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொள்வதே நல்லது” என அறிவுறுத்துகிறார் டாக்டர் ரவிச்சந்திரன்.