ஆரோக்கிய உணவு

சோர்வை போக்கும் பீட்ரூட், காரட் பானம்

தேர்வு நெருங்குகிற நேரம். அதிக நேரம் படிப்பதால் உடலில் சோர்வு ஏற்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம். எனவே, சோர்வில் இருந்து விடுபட்டு புத்துணர்வு தருவது சத்து பானம். தேர்வு காலத்தில் இந்த பானங்களை குடித்தால் உடல்நலம் மேம்படும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்தசோகை இல்லாமல் போகும். பீட்ரூட், காரட் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு மற்றும் ஆரோக்கியம் ஏற்படுத்தும் பானம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பீட்ரூட் சாறு, கேரட் சாறு, பனங்கற்கண்டு. கேரட் மற்றும் பீட்ரூட் சாறு சம அளவு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். வாசனைக்காக ஒரு ஏலக்காய் தட்டி போடவும். இதை நன்றாக கலந்து வடிகட்டவும். இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் சோர்வு நீங்கும். ஆரோக்கியம் கிடைக்கும். கேரட், பீட்ரூட்டை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கேரட், பீட்ரூட் சாறு, பூண்டு, வெங்காயம், ஏலக்காய், லவங்கப் பட்டை, உப்பு, மிளகுப் பொடி, நெய். பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் விடவும். ஒரு ஏலக்காய், ஒரு துண்டு லவங்கப் பட்டை, நசுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்க்கவும். வதங்கிய பின் கேரட், பீட்ரூட் சாறு சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுப் பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை தேர்வு காலத்தில் கொடுப்பதால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

ரத்தசோகை போகும். உடல் பலம் பெறும். உள்ளம் தெளிவடையும். கேரட், பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மாதுளையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ரத்த விருத்திக்கான பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, நாட்டு சர்க்கரை, ஏலக்காய். நாட்டு சர்க்கரையில் மண் இருக்கும் என்பதால் கரைத்து வடிக்கட்டி எடுக்கவும். இந்த கரைசலை பாகு பதத்தில் கொதிக்க வைக்க வேண்டும். ஏலக்காய் சேர்த்த மாதுளை சாறு சேர்க்கவும்.

சிறிது நேரம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பாகில் சிறிது எடுத்து நீர்விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன சோர்வு, உடல் சோர்வை போக்கும். புத்துணர்வை கொடுக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நேந்திரம் பழம் இனிப்பு தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: நேந்திரம் பழம், தேங்காய் துருவல், ஏலக்காய், நெய், வெல்லம்.

பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் துண்டுகளாக்கிய நேந்திரம் பழத்தை போட்டு வதக்கவும். இதனுடன் சிறிது தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். வாசனைக்காக ஏலக்காய் போடவும். பின்னர் தேன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். நேந்திரம் பழத்தை சாப்பிட குழந்தைகள் தயங்குவார்கள். எனவே, இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நேந்திரம் பழத்தில் செய்யப்பட்ட இனிப்பு உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
sl1539

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button