Source:maalaimalar பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கமும், தொடர்பும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளி, கணவன்-மனைவி உறவை மட்டுமில்லாமல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவையும் பாதிக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதை அதிகரிப் பதற்கான சில எளிய வழிகள் இதோ…
முன்னுதாரணம்: குழந்தைகள் பெற்றோரின் பிம்பங்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் செயல் எப்படி உள்ளதோ, அதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடுகளும் வெளிப்படும். பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குழந்தைகள் முன்னால் காண்பிக்கக்கூடாது. நமக்கு இருக்கும் வேலைப்பளுவை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடலாம். இது அவர்களின் மனநிலையைச் சீராக்கும்.
மனம்விட்டு பேசுதல்: பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே, தகவல் பரிமாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் விட்டுப் பேசுதல் முக்கியமானது. குழந்தைகள் நமது பேச்சை கவனிப்பதற்கு ஏற்றவாறு, நாம் பேசும் முறையைச் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் வார்த்தையை விட, உடல் மொழியைத்தான் குழந்தைகள் அதிகமாக கவனிப்பார்கள். உளவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பேசும்போது வார்த்தை 7 சதவீதமும், உடல்மொழி 55 சதவீதமும், குரலின் சத்தம் 38 சதவீதமும் இருக்க வேண்டும்.
குழந்தைகளை பேச வைத்தல்: பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி.
நேரத்தைத் திட்டமிடுதல்: ஒரு நாளில், சில மணி நேரத்தைக் குடும்பத்திற்காக மட்டும் ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், வெளி வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். குழந்தைகளும் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்ப்பார்கள். தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். இந்த நேரத்தை அனைவரும் வெளிப்படையாகவும், தெளிவாகவும், மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக மாற்றுங்கள்.
நடைமுறையை உருவாக்குதல்: அலுவலக பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதுபோல், குடும்பத்தின் நடைமுறைக்கும் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும். படுக்கைக்கு செல்வது, உணவுக்கான நேரம், விளையாட்டு நேரம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது என, முறைப்படுத்த வேண்டும்.
பாராட்டுங்கள்: குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான தொடர்பை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் உதவும் ஒரே வழி ஒருவருக்கொருவர் தொடர்ந்து பாராட்டி ஆதரவளிப்பதுதான். குழந்தைகள் சவாலான விஷயங்களைச் சந்திக்கும்போது, இந்த பழக்கம் அவர்களை ஊக்குவிக்க உதவும்.