24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht4158
மருத்துவ குறிப்பு

சரும நோய்களை சமாளிப்பது எப்படி?

டாக்டர் கு.கணேசன்

இந்தியா போன்ற வெப்பநாடுகளில் வசிப்போருக்கு சருமத்தில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள் பெருக்கம், வசிப்பிட நெருக்கடி, பொதுச் சுகாதாரக்குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தேமல் ஏன் வருகிறது?

சருமத்தில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியா ஃபர்ஃபர்’ (Malassezia furfur) எனும் கிருமியால் இந்தப் பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளைய வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.

மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் சருமம் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு.வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் நீரிழிவு உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்க பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சுகிற மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள் நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, சரும மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தக் களிம்பு/பவுடர்களில் ஒன்றை சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசி வந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டு வர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.

காளான் படை வருவது ஏன்?

சுய சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகப் புழக்கம் உள்ளவர்களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்தக் கிருமிகள் மண், மனிதன், விலங்கு ஆகிய மூன்றிலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.

காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ (Tinea infection) என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் முக்கியமானவை சில… மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன். முதல் இரண்டு கிருமிகள் சருமத்தையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாக சொல்லப்பட்ட கிருமி சருமத்தையும் நகங்களையும் பாதிக்கக்கூடியது.

வகைகள்?

இந்தக் கிருமிகள் பாதிக்கின்ற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலைப்படை, முகப்படை, உடல் படை, தொடை இடுக்குப்படை, நகப்படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள்.

தலைப்படை

பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. சுய சுத்தக் குறைவு இது வருவதற்கு முக்கியக் காரணம். நாவிதரின் சரியாக சுத்தப்படுத்தாத கத்தியால் மொட்டை போடும்போது இந்த நோய் பரவுகிற வாய்ப்பு அதிகம். மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு. இந்த நோய் பாதிப்புள்ளவருக்குத் தலையில் ஆங்காங்கே சிறிதளவு முடி கொட்டியிருக்கும். வட்ட வட்டமாகத் தலையில் சொட்டை விழுந்திருக்கும். அரிப்பு எடுக்கும். சிலருக்கு சீழ்க்கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கும்.

முகப்படை

இந்த நோய் மூக்கு, கன்னம், தாடி வளருகிற இடம் என முகத்தில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் இது சுத்தப்படுத்தப்படாத கத்தி, பிளேடு போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்தைச் சவரம் செய்யும்போது பரவுகிறது. முகத்தில் வட்ட வட்டமாக படைகள் தோன்றுவதும், தாடி வளர வேண்டிய இடங்களில் முடி இல்லாமல் இருப்பதும் அரிப்பு எடுப்பதும் இதன் முக்கிய அறிகுறிகள். தேமலுக்குச் சொன்ன சிகிச்சையே இதற்கும் பொருந்தும். புது பிளேடு அல்லது நன்றாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கத்தியால் முகத்தைச் சவரம் செய்தால் இந்த நோய் வருவதில்லை.

படர் தாமரை

உடல் படைக்கு இன்னொரு பெயர் படர் தாமரை (Ring worm). பொதுமக்களிடம் மிகச் சாதாரணமாகக் காணப்படும் நோய் இது. பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக, வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி இந்தத் தொற்று இருக்கும். இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும் கை, கால்களில் தண்ணீர் பட்டு ஈரம் அதிக நேரம் இருப்பதாலும் அந்த ஈரத்தில் காளான் கிருமிகள் எளிதாக வளர்ந்து நோயைத் தருகின்றன. வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உடுத்தும்போது, இது மிக எளிதில் பரவிவிடுகிறது.

தொடை இடுக்குப் படை

சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. பாமர மக்கள் இதை ‘கக்கூஸ் பத்து’ என்றும் ‘வண்ணான் படை’ என்றும் அழைக்கின்றனர். நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்குத் தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும். தூக்கத்தில் அதைச் சொரியச் சொரிய நகங்களில் இருக்கின்ற பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொள்ளும். இது ரத்தச் சர்க்கரையை இன்னும் அதிகரித்துவிடும். இதனால் நோய் தீவிரமடையும். ரத்தச் சர்க்கரையை சரியாக வைத்திருக்காவிட்டால், நோய் குணமாக அதிக நாள் ஆகும்.

அதிலும் கோடையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். வழக்கமாக பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு அதிகமாகத் தெரியும். இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ஏற்படும் நோயை ‘சரும மடிப்பு நோய்’ (Intertrigo) என்கிறோம். பொதுவாக இந்த இடங்களில் உராய்வு அதிகமாக இருக்கும் என்பதால், சருமத்தின் மேல் பகுதி அடிக்கடி சிதைந்துவிடும். இதன் வழியாக காளான் கிருமிகள் உடலுக்குள் நுழைவது எளிதாகிவிடும். இது சரும மடிப்பு நோய்க்கு வழிவிடும்.

நகப் படை

இது பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது. நகத்தின் கடினமான பகுதியைக் காளான் கிருமிகள் பாதிக்கும்போது நகம் தன் இயற்கை நிறத்தை இழக்கிறது. மினுமினுப்புத் தன்மையும் கடினத் தன்மையும் குறைகின்றன. நகம், முதலில் வெள்ளையாகவும் அதைத் தொடர்ந்து மாநிறம் அல்லது கறுப்பு நிறத்துக்கும் மாறி சொத்தை ஆகிறது.

இதனால் அது எளிதில் உடைந்துவிடுகிறது. இந்த நோய்க்குப் பொறுமையாக சிகிச்சை பெற வேண்டும். கை விரல் நகப் படைக்கு ஆறு மாதங்கள் வரைக்கும் கால் விரல் நகப் படைக்கு ஒரு வருடம் வரைக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும்.

கால் படை

‘சேற்றுப் புண்’ (Athlete’s foot) எனப் பாமரர்களால் அழைக்கப்படும் காளான் நோய் இது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்துப் புண் உண்டாகும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளில் ஏற்படுகிறது. ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும் கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது. பெரும்பாலும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை, பண்ணை வேலை செய்கிறவர்கள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?

எல்லாக் காளான் நோய்களுக்கும் தேமலுக்குச் சொன்னதுபோல் காளான் படைக் களிம்புகளை/ பவுடர்களை தொடர்ந்து பூசி, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தகுந்த காளான் கொல்லி மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் குணப்படுத்தி விடலாம். சிலருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளும் தேவைப்படலாம்.

வியர்க்குரு

இது பொதுவாக கோடையில் தாக்கும் சருமப் பிரச்னை. கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தைவிட 3 மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போது துடைத்து உடலை சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குரு பவுடர் அல்லது காலமின் லோஷனை வியர்க்குருவில் பூசினால் அரிப்பு குறையும்.

புண்களும் கட்டிகளும்

சருமத்தின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியக்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், வியர்வைச் சுரப்பிகள் அடைத்து கட்டியாகிவிடும். இதுதான் வேனல்கட்டி (Summer Boil). அடுத்து, சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் சருமத்தின் மேல் பகுதியிலும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு புண்கள் (Impetigo) உண்டாகும். சிலருக்கு ராஜபிளவை (Carbuncle) ஏற்படும். இந்தப் பிரச்னைகளுக்கும் தகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

சொறி சிரங்கு

‘சார்கோப்டிஸ் ஸ்கேபி’ (Sarcoptes scabei) எனும் ஒட்டுண்ணிக் கிருமிகளால் சருமம் பாதிக்கப்படும்போது சிரங்கு வருகிறது. நோயாளியின் துண்டு, கைக்குட்டை, உள்ளாடைகள், உடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, சோப்பு, சீப்பு, முகப்பவுடர், அழகுச் சாதனப்பொருட்கள், பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும். ஒரே படுக்கையில் படுத்து உறங்குபவர்களுக்கும், விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படிப்பவர்களுக்கும் அல்லது பணி செய்கிறவர்களுக்கும் உடல் நெருக்கத்தின் காரணமாக மற்றவர்களுக்கும் இது எளிதில் பரவிவிடும்.

கை, கால் விரல் இடுக்குகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது சிரங்கு நோயின் முதல் அறிகுறி, முக்கிய அறிகுறி. இந்த அரிப்பு இரவுகளில் அதிகமாக தொல்லை தரும். நோயாளி சருமத்தைச் சொறியும்போது பாக்டீரியா கிருமிகள் சருமத்தைப் பாதித்து புண் மற்றும் கொப்புளங்கள் உண்டாகும்… பிறகு உடல் முழுவதும் பரவும். முக்கியமாக இருப்பிடப்பகுதி, மணிக்கட்டு, தொடை இடுக்கு, பிறப்புறுப்புப் பகுதி, அக்குள், தொப்புள், வயிறு, முழங்கால் ஆகியவற்றில் பரவும். சீழ் பிடிக்கும். காய்ச்சல் வரும்.

சிரங்கு நோயைக் குணப்படுத்த பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி ஏதாவது ஒரு மருந்தை உடல் முழுவதும் பூசி 24 மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு சிரங்கு வந்துவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இது மற்றவர்களுக்கும் பரவாது. மீண்டும் வராது. சிரங்குப் புண்களில் சீழ் பிடித்திருந்தால், தகுந்த ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிட வேண்டும். அரிப்பைக் குறைக்கும் மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டும்.

தடுக்க என்ன வழி?

சுய சுத்தம் மிக முக்கியம். தினமும் இரண்டுமுறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம். முதல் நாள் உடுத்திய உடைகளை சோப்பு போட்டுத் துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது. அடுத்தவரின் துண்டு, படுக்கை விரிப்புகள், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்துகொள்ளக்கூடாது

இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது. பருத்தித் துணியாலான ஆடைகளே நல்லது. வியர்வையை விரைவில் வெளியேற்ற முடியாத செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணியக்கூடாது.

மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், நனைந்த உடைகளை உடனே களைந்துவிட்டு, உடலைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். உடலில் அதிக ஈரத்துடன் அதிக நேரம் இருக்கக்கூடாது. இறுக்கமான காலணிகள் / காலுறைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். கம்பளியில் தயாரிக்கப்பட்ட உடைகள் மற்றும் காலணிகளை தேவையில்லாமல் அணிய வேண்டாம்.

அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை எப்போதும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். கை, கால் விரல் இடுக்குகளில் அதிகம் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். சிரங்கு, காளான் படை உள்ளவர்களுடன் தொட்டுப் பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.
ht4158

Related posts

ஒரு ஆய்வு தெரி விக்கிறது … முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்தயத்துலயும் இவ்வளவு பக்க விளைவுகளா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

nathan

உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?

nathan

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் இந்த அற்புத பொருள்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு??

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல… இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு…

nathan

மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து உணவு ..அமெரிக்க விஞ்ஞானிகள்

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

உங்கள் கவனத்துக்கு காதுக்குள்ள ஏதாவது பூச்சி போய்ட்டா உடனே என்ன பண்ணணும்?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்

nathan