நாம் உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, அந்த உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வளவு தான் சத்தான உணவாக இருந்தாலும், அதை தவறான நேரத்தில் சாப்பிட்டால், உண்மையில் எதிர்வினை ஏற்படலாம். சில உணவுகளை தூங்குவதற்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் அது இரவுத் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, நெஞ்செரிச்சலை தூண்டிவிடும்.
இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமானால், இரவு உணவானது செரிமானமாவதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். மேலும் இரவு தூங்குவதற்கு முன் சிற்றுண்டிகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது அஜீரணத்திற்கு வழிவகுப்பதோடு, இரவு தூக்கத்தையும் பாழாக்கும்.
சிலர் படுக்கைக்கு செல்லும் முன் மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நம்புகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. மது உண்மையில் உங்கள் தூக்கத்தின் அளவைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, மது அருந்துவது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுத்தி, தூக்கத்தில் சப்தமான குறட்டைக்கு வழிவகுக்கும். கீழே ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெற இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிக நீர்ச்சத்துள்ள உணவுகள்
இரவு நேரத்தில் செலரி, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளை இரவு தூங்கும் முன்பு சாப்பிட்டால், இரவு நேரத்தில் சிறுநீர் பையை விரைவில் நிரப்பி, நள்ளிரத்தில் சிறுநீர் கழிக்க எழத் தூண்டும். இதனால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், அது அஜீரண கோளாறை உண்டாக்குவதோடு, நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும். காரமான உணவில் காணப்படும் கேப்சைசின் என்னும் பொருள், உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றும் இரவு தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டால், அது உடலுக்கு ஆற்றலை வழங்கும். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலில் சளி உற்பத்தியை அதிகரிப்பதோடு, அஜீரண கோளாறையும் ஏற்படுத்தும்.
ஆப்பிள்
ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புக்களின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும் மற்றும் அது அசிடிட்டிக்கு வழிவகுக்கும். எனவே தான் இரவு நேரத்தில் பழங்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ப்ராக்கோலி, காலிஃப்ளவர்
ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஆனால் இதில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இரவு நேரத்தில் இந்த காய்கறிகள் சாப்பிட ஏற்றதல்ல. ஒருவேளை சாப்பிட்டால், இரவு நேரத்தில் தூங்கும் போது, உங்கள் செரிமான மண்டலம் அதை ஜீரணிப்பதற்கு ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உங்களின் இரவுத் தூக்கம் பாழாகும்.
நட்ஸ்
பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற நட்ஸ்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடனும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. ஆனால் இவற்றில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளது. எனவே இந்த நட்ஸ்களை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
டார்க் சாக்லேட்
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த டார்க் சாக்லேட் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட உதவுகின்றன. அதே சமயம் இது இதய நோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன. ஆனால் இதில் உள்ள காப்ஃபைன் மற்றும் அமினோ அமிலம், விழிப்புணர்வை மேம்படுத்தும். ஆகவே இரவு நேரத்தில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், இரவில் தூக்கம் வராமல் தவிக்க வேண்டியிருக்கும்.