உங்களால் காலையில் எழுந்திரிக்கவே முடியவில்லையா? அப்படி எழுந்த பின்பு மிகவும் சோர்வுடன் உணர்கிறீர்களா? அப்படியெனில் அதன் பின் நிச்சயம் ஒருசில காரணங்கள் இருக்கும். அது வேறொன்றும் இல்லை பழக்கவழக்கங்கள் தான்.
காலையில் மிகவும் சோர்வுடன் உணர்வதற்கு தூக்கமின்மை, மோசமான டயட், வாழ்க்கை முறை மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் போன்றவைகள் காரணமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தைராய்டு பிரச்சனை இருந்தாலும் காலையில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
இத்தகைய சோர்வை தடுக்க, ஒருசில பழக்கவழக்கங்கள் அன்றாடம் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் அலுவலகத்தில் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
சரி, இப்போது காலையில் பெரும்பாலானோர் உணரும் அதிகப்படியான சோர்வை தடுக்க ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது என்னவென்று பார்ப்போமா!!!
நல்ல தூக்கம்
காலையில் மிகவும் சோர்வாக இருப்பதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை தான். எனவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் வேகமாக எழ வேண்டும். இப்படி தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்தால், உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
‘ஜில்’ தண்ணீர் குளியல்
காலையில் எழுந்ததும், சுடுநீர் குளியல் எடுப்பதற்கு பதிலாக, குளிர்ச்சியான தண்ணீர் குளியல் எடுப்பது, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். முக்கியமாக குளிர்ந்த நீர் குளியல் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், இதனால் உடல் சோர்வு நீங்கும்.
உடற்பயிற்சி
காலையில் சற்று வேகமாக எழுந்து, சிறிது தூரம் ஜாக்கிங் செய்வதோடு, வேறு சில சிம்பிளான உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சோர்வு நீங்கி நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
டீ அல்லது காபி
காலையில் மிகவும் சோர்வை உணர்கிறவர்கள், ஒரு கப் வெதுவெதுப்பான துளசி டீ குடித்து வருவது நல்லது. ஏனெனில் துளசி இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் ஆற்றலை மீண்டும் பெற உதவும். அதுவே காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் உடலின் சக்தியை அதிகரிக்கும்.
பழச்சாறுகள்
காலையில் எழுந்ததும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உடல் சோர்வை நீக்கும். பிரஷ் ஜூஸ் உடலை புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, நாள் முழுவதும் சோர்வின்றி செயல்பட உங்கள் உடலும் தயாராகும்.
நல்ல காலை உணவு
நல்ல காலை உணவு
காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி பலமுறை படித்திருப்போம். அத்தகைய மிகவும் முக்கியமான காலை உணவின் போது ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் ஆற்றலை தக்க வைக்கும் உணவுகளான இட்லி, தோசை, அடை, கூழ் போன்ற உணவுகளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக சோர்வின்றி செயல்பட உதவும்.