நண்பர்கள் பணத்துக்காகக் கஷ்டப்படும் வேளையில் அவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டியது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், அதற்கு முன் பல விஷயங்களை அலசி ஆராய்வது அவசியம்.
முதலில், உங்கள் நண்பர்களுக்குக் கொடுக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டும். ‘தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்’ என்பதற்கிணங்க, உங்கள் செலவுகளையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அவை போக தேவையான அளவுக்கு உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் அதை அவர்களுக்குக் கொடுக்கலாம்.
மேலும், உங்கள் நண்பர்களுக்குக் கடன் கொடுக்கும் முன் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. இதோ அந்தக் கேள்விகள்…
அப்படி என்ன கஷ்டம்?
உங்கள் நண்பர்களுக்கு எதற்காக அந்தக் கடன் பணம் தேவைப்படுகிறது என்பதை அவர்களிடம் கண்டிப்பாகக் கேளுங்கள். கடன் கேட்கத் துணிந்தவர்களுக்கு, இதற்கான பதில் சொல்வதில் சிரமம் ஏதும் இருக்காது. எதற்காகவும் நீங்கள் தயங்க வேண்டாம். உங்கள் நண்பர்கள் அதை எப்படி செலவழிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை உங்களுக்கு உள்ளது.
கடனைத் திருப்ப முடியுமா?
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தான் உங்கள் நண்பர்களுக்குக் கடனாகக் கொடுக்கப் போகிறீர்கள். உங்களிடம் வாங்கிய கடனை அவர்களால் உங்களுக்குத் திருப்பித் தர முடியுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திருப்பித் தரும் அளவுக்கு அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு உதவியுள்ளார்களா?
உங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சமயத்தில் அவர்கள் உங்களுக்கு உதவியுள்ளார்களா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். அது கடனுதவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கையான நண்பர்களுக்கு நீங்களும் உதவலாம்.
உங்களிடம் பணம் உள்ளதா?
உங்கள் நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவுக்கு உங்களிடம் பணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முன் அவர்களுக்கு நீங்கள் எந்தவிதமான உறுதியையும் அளித்து விடாதீர்கள். உங்கள் செலவுகளுக்குத் தேவையான பணம் போக மீதம் இருந்தால் மட்டுமே உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் கொடுக்க முன் வரலாம்.
கடன் பணத்தை இழக்கத் தயாரா?
உங்களிடம் கடன் வாங்கிய நண்பர்கள் நல்ல நோக்கத்தில் இருந்தாலும், சில சமயம் அவர்களால் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். எனவே, அந்தச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் வீட்டு வாடகைக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து உங்கள் நண்பரின் அவசரத்திற்குக் கொடுத்து விடுவீர்கள். ஆனால், உங்கள் வாடகையைச் செலுத்துவதற்கான நேரத்துக்குள் அப்பணத்தை உங்கள் நண்பரால் உங்களிடம் திருப்பித் தர முடியாமல் போய் விடலாம்.
இந்த நட்பு தேவை தானா?
உங்கள் நண்பர்களின் கொடுக்கல், வாங்கல் குறித்து உங்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் கடன் பணத்தை ஒழுங்காகத் திருப்பித் தர மாட்டார்கள் என்று நீங்கள் உணர்ந்தால், அப்படிப்பட்ட நட்பு தேவைதானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நட்பு வேறு; பணம் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா?
நீங்கள் கடன் கொடுப்பது உங்கள் நண்பருக்குத் தான் என்றாலும், பணம் கொடுத்ததற்கான எழுத்துப் பூர்வமான ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். எப்போது கொடுத்தீர்கள், எவ்வளவு கொடுத்தீர்கள், அவர் எப்போது கொடுப்பார், வட்டி எவ்வளவு என்று எல்லா விவரங்களும் அந்தப் பத்திரத்தில் இருக்க வேண்டும். பணம் வாங்கியதை உறுதி செய்யும் விதமாக அதில் அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். இது இருவருக்கும் நல்லது.