தினமும் காலையில் வெந்நீரில் தேனும் எலுமிச்சைப்பழச்சாறும் கலந்து குடித்தால் எடையைக் குறைக்கலாம் என்கிறார்கள் பலரும். அது உண்மையா? தேனை வேறு எதில் சேர்த்துக் கொள்ளலாம்?
“தேன் இயற்கையான இனிப்பு என்பது மட்டுமன்றி, உடலின் நச்சு நீக்கம், சீரான ரத்த ஓட்டத்துக்கும் உதவக்கூடியது. தேன்-இஞ்சிச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து அல்லது தேனுடன் இஞ்சித் துருவல் சேர்த்து எடுத்துக்கொள்வது சளி, இருமல் மற்றும் அஜீரண பிரச்னைகளுக்கு உதவும். சர்க்கரையைத் தவிர்க்க நினைப்போர் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால், இதை சர்க்கரைநோயாளிகள் சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய் ஜூஸ் உடன் தேன் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும். இஞ்சி ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்றவற்றுடனும் தேன் கலந்து பருகலாம்.
வெந்நீரில் தேனும் எலுமிச்சைப்பழச்சாறும் கலந்து குடிப்பதை எடைக்குறைப்புக்கான மிகச் சிறந்த வழியென பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம்.
எனவே, நன்கு கொதிக்க வைத்த நீரை ஆறவைத்து அதில் தேன் கலந்து குடிக்கலாம். ஆனாலும், அது எடையைக் குறைக்க உதவாது என்பதுதான் உண்மை.
`பல வருடங்களாக நாங்கள் இப்படித்தான் குடிக்கிறோம்… எடை குறைகிறதே…’ என்று கேட்பவர்களும் உண்டு. காலையில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்கள், பால், அதில் சேர்க்கும் சர்க்கரை என சுமார் 150 முதல் 160 கலோரிகள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். அதைத் தவிர்த்துவிட்டு வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கலோரிகள் குறையலாம். ஆனாலும், எடையைக் குறைப்பதற்கான விஷயமாக இதைப் பின்பற்றக் கூடாது. எடைக்குறைப்புக்கும் வெந்நீர்- தேன் கலவைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். தேன் உபயோகிப்பதென முடிவெடுத்துவிட்டால் முதலில் அதன் தரத்தை அறிந்து சரியானதாக வாங்குங்கள்.”