முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது.
எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும். அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக்கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவைப் பற்றி நினைக்கவும் கூடாது. நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக்கூடாது. ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக்கூடாது.
ஒருவருடைய செரிக்கும் சக்தியாகிய அக்னியின் பலத்தைப் பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலைக் கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்குத் தேவையான உணவாகும் என ஆயுர்வேதம் சொல்கிறது.
அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்கக்கடினமான உணவுகளை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும். இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.
உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும் பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். பலகார வகைகளை அதிகம் உண்பதால், வாத, பித்த, கபம் அதிகமாகி உடல் செரிமானப் பக்குவத்தை இழக்கிறது. இதனால் அஜீரண நோய்கள், வாந்திபேதி, வயிற்று வலி போன்றவை வருகின்றன. சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவதுபோன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும்.
இவ்வாறு தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். இதை `ஆமவிஷம்’ என்பார்கள். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்கமாட்டார்கள். பட்டினி இருந்து செரிக்க வைத்து, பிறகு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார்கள்.
Courtesy: MaalaiMalar