தஞ்சாவூர் என்றால் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சாவூரில் ரெசிபி ஒன்றும் மிகவும் பிரபலமானது. அது தான் தஞ்சாவூர் கதம்ப சாதம். இந்த கதம்ப சாதமானது ஐயர் வீடுகளில் அதிகம் செய்யப்படும். இந்த கதம்ப சாதத்தை உங்கள் வீடுகளில் செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு தஞ்சாவூர் கதம்ப சாதத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.
Thanjavur Kadamba Sadam
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப் (நீரில் கழுவி வைத்தது)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தேங்காய் பால் – 1 மற்றும் 1/2 கப் (வெதுவெதுப்பான நீர் சேர்த்தது)
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
முந்திரி – 100 கிராம்
காய்கறிகள் – 1 கப் (பீன்ஸ், மொச்சை, கத்திரிக்காய், கேரட், சௌசௌ, முருங்கைக்காய்)
பச்சை மிளகாய் – 1
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் மல்லி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் கிராம்பு, ஏலக்காய் சேர்தது தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் அரிசியை சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்த தேங்காய் பாலை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட வேண்டும்.
பின் குக்கரை திறந்து, அதில் கெட்டியான தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி 15 நிமிடம் கழித்து திறந்து, சிறிது நெய் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், தஞ்சாவூர் கதம்ப சாதம் ரெடி!!!