ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் பருவ வயது தொடங்கும் போதே சேர்ந்து முளைக்கும் ஆசை தான். சிலர் இயல்பாகவே ஸ்லிம்மாக இருப்பார்கள். சிலர் பருவ வயது எட்டும் போது தான் ஜிம், ஜாக்கிங், ரன்னிங் எல்லாம் செய்து தங்களது உடலை சில்லிமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். சிலர் என்ன செய்தாலும் உடல் எடை குறையவே குறையாது. உடல் பருமன் என்பது சிலருக்கு ஜீன் பிரச்சனையாக கூட இருக்கலாம். ஆனால், இவ்வுலகத்தில் தீர்வுகள் இல்லாமல் என ஒரு பிரச்சனையும் இல்லை. அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது.
உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக விரும்புபவர்களில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, டி.வி.யில் காண்பிக்கும் சில பெல்ட்டுகளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டு உட்கார்ந்துக் கொள்வது, புத்தாண்டு அன்று உறுதிமொழி எடுத்துவிட்டு ஒரு சில நாட்கள் மட்டும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற செயல்களாகும். நீங்கள் ஸ்லிம்மாக வேண்டும் எனில் இடைவிடாது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உடல் வலிக்கிறது என சலித்துக் கொண்டால் ஸ்லிம்மாக முடியாது, பெரிய சைஸ் சிலிண்டராகத் தான் ஆக முடியும். சரி, சலித்துக் கொள்ளாமல் ஸ்லிம் ஆவதற்கான சில எளிய முறைகளை கடைப்பிடியுங்கள்.
உணவுக் கட்டுப்பாடு
நீங்கள் சாப்பிடும் போது வயிறு 8௦% நிறைந்துவிட்டது என தெரியும் போதே, போதும் என்று எழுந்துவிடுங்கள். போதுமென்ற மனமே நன்மை விளைவிக்கும் மற்றும் தொப்பை குறைந்து ஸ்லிம்மாகவும் உதவும்.
உணவின் அளவு
ஒருவேளை சாப்பிட அமர்ந்த பின் எழுந்திருக்க மனம் வரவில்லை என்ன செய்ய என கேட்பவர்கள், சாப்பிடும் முன்னரே உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை குறையாது இருக்க முக்கிய காரணமே முறையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இருப்பது தான்.
ஆல்கஹால்
மதுபானங்களை உட்கொள்வதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள். மதுபானம் அருந்துவதால் நீங்கள் உடல் எடை குறைக்க எந்த முயற்சி எடுத்தாலும் எடுபடாது. இதற்கு மாறாக முடிந்த அளவு கடின உணவுகளை ஒதுக்கிவிட்டு, பழரசம் அருந்துங்கள். இது, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மற்றும் கொழுப்புச்சத்து சேராமலும் இருக்க தடுக்கும்
அதிகாலை எழுந்திரியுங்கள்
காலை அதிக நேரம் தூங்குவதினால் நாம் முந்தைய நாள் இரவு உட்கொண்ட உணவு முழுவதுமாய் கொழுப்பாக மாறி உடலிலேயே தங்கிவிடுகிறது. இதை தடுக்க, அதிகாலை சீக்கிரம் எழுந்து, வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது உங்களுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக நன்கு உதவும்.
ஆரோக்கியமான காலை உணவு
பெரும்பாலும் நாம் காலை உணவில் சரிவர அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. இது அனைவரும் செய்யும் தவறு. காலை உணவை சரியான நேரத்திற்கு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக எடுத்துக் கொள்வது முக்கியம். முடிந்த வரை, வேக வைத்த காய்கறிகள், பால், போன்றவற்றை எடுத்துக் கொள்வது சிறந்த காலை உணவாக அமையும்.
பசியைக் கட்டுப்படுத்துங்கள்
உடல் எடை அதிகமாக முக்கிய காரணமாக இருப்பது கண்ட நேரங்களில் கண்ட உணவை உட்கொள்வது ஆகும். உங்கள் பசியை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். சரியான நேரத்திற்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தின்பண்டங்களையும், நொறுக்கு தீனிகளையும் அறவே ஒதுக்கிவிட வேண்டும்.
கொழுப்புச்சத்து
கொழுப்புச்சத்தில் நல்லது, தீயது என நம் உடலுக்கு தேவையானது, தேவை இல்லாதாது என இரண்டு வகை கொழுப்புச்சத்துகள் இருக்கின்றன. எனவே, நல்ல மருத்துவரிடம் ஆலோசித்து உணவு தேர்வு செய்வதில் என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என அறிந்து அதற்க்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ளுங்கள்.
மன அழுத்தம்
பெரும்பாலானவர்கள் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் தேவையின்றியும், அளவுக்கு அதிகமாகவும் கவலைப்படுவார்கள். இதனால் மன அழுத்தம் தான் உண்டாகும். மன அழுத்தம் உண்டாவதால், உடல் எடை பிரச்சனை, இரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மன அழுத்தம் ஏற்படாது பார்த்துக் கொள்ளுங்கள்.
நல்ல உறக்கம்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் உறக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. உறக்கம் உடல் எடை சார்ந்த பிரச்சனைக்கு மட்டுமன்றி, பொதுவாகவே ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான ஒன்றாகும். நல்ல உறக்கம், உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
மருத்துவ பரிசோதனை
என்ன தான் சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என அல்லாம் செய்து வந்தாலும். தவறாது வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில், நாம் முன்பு கூறியதை போல ஜீன் பிரச்சனைகளினாலும் உடல் எடை பிரச்சனைகள் வரக்கூடும்.