நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை ஒரு சில விதிமுறைகளுக்கு இணங்க சாப்பிட்டாலே போதும். நாமும் ஆரோக்கியமாக வாழ முடியும். அது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல. இப்போது அதுப்போன்ற 10 வழிகளை நாம் பார்க்கலாம்.
பசிக்கும் முன்பே புசி
நாம் பசி எடுத்த பிறகு சாப்பிடும் போது, பசி மயக்கத்திலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவது வழக்கம். எனவே, நமக்குப் பசி எடுப்பதற்கு முன்பாகவே சாப்பிட்டு விட்டால் நல்லது. அதேப்போல் தாகம் எடுப்பதற்கு முன்பே தண்ணீர் குடிப்பதும் நல்லது.
மென்று சாப்பிடு
நாம் எப்போதும் அவதி அவதியாக சாப்பிடக் கூடாது. அது நிறைய உபாதைகளில் கொண்டு போய்விடும். ஒரு வாய் உணவை எடுத்துக் கொள்ளும் போது, அதை நன்றாக மென்று வயிற்றுக்குள் தள்ளிய பிறகே, அடுத்த வாய் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் தாடைகளுக்கும் செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
வயிற்றுக்கு சாப்பிடு
இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தான் சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடனே சாப்பிட வேண்டும். அப்போது தான் நாம் அளவோடு சாப்பிட முடியும்.
தண்ணீர் குடி
பழச்சாறுகளை விட, சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் நிறைய நீர் குடிப்பதும் மிகமிக நல்லது. சோடா உள்ளிட்ட அதிக கலோரிகள் கிடைக்கும் பானங்களையும் குடிக்கலாம்.
விரைவான காலை உணவு
என்ன ஆனாலும் சரி, நாம் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. மேலும் காலை உணவை எவ்வளுக்கு எவ்வளவு சீக்கிரமாக நாம் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.
பலவித காய், கனிகள்
எப்போதும் ஒரே விதமான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்ல. வெரைட்டி வெரைட்டியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வைட்டமின், புரதம், மினரல், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் என்று எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
நிறைய மீன் சாப்பிடு
வாரத்திற்கு இரு முறையாவது மீன் சாப்பிடுவது நம் உடலுக்கு மிகமிக நல்லது. அதிலும் ஃப்ரெஷ்ஷான மீன் வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது.
கிரில் சிக்கன் ஓ.கே.
சிக்கனில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அதைப் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால், கிரில் சிக்கனை சாப்பிடலாம்.
குறைவான கொழுப்பு அவசியம்
கொழுப்புச் சத்து குறைவான சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள். மீன் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளும் நல்லது.
வெள்ளையான உணவுகள் நல்லதல்ல
வெண்மையாக இருக்கும் உணவுப் பொருட்களான உப்பு, மாவு, சர்க்கரை உள்ளிட்டவற்றை அளவோடு தான் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை எப்போது வேண்டுமானாலும் நம் ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும்.