சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!!
Pepper Rasam Recipe
தேவையான பொருட்கள்:
புளி – 1 எலுமிச்சை அளவு
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 1
வரமிளகாய் – 1
துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!