வீட்டில் வளர்க்க ஏதுவான நாய்க்குட்டி எது? சமீப காலமாக ‘உயர் ரக நாய்களை வாங்க வேண்டாம்… நாட்டு நாய்களை எடுத்து வளருங்கள்’ என தீவிர பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தளவுக்கு நியாயம் இருக்கிறது?
செல்லப் பிராணிகளுக்கான ஆலோசகர் ஐசக் டெமிட்ரியஸ்
முதலில் ஒரு விஷயத்தை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நாட்டு நாய்கள் என்றால் தெரு நாய்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். அப்படியல்ல. சிப்பிப்பாறை, கன்னி, வேங்கை, ராஜபாளையம் மற்றும் கோம்பை ஆகியவற்றைத்தான் native dogs என்று சொல்கிறோம். இவற்றில் கன்னிக்கும் வேங்கைக்கும் லேசான நிற வேறுபாடு மட்டுமே இருக்கும்.
அந்தக் காலங்களில் இரண்டே தேவைகளுக்காகத்தான் நாய் வளர்த்தார்கள். ஒன்று வேட்டைக்கு. இன்னொன்று காவல் காக்க… அப்படிப் பார்த்தால் சிப்பிப்பாறை, கன்னி மற்றும் வேங்கை மூன்றும் வேட்டைக்கானவை. வேகமாக ஓடும். முயல் வேட்டையாடும். தோட்டங்களை நாசப்படுத்தும் பெருச்சாளிகளை விரட்டும்.ராஜபாளையமும் கோம்பையும் காவலுக்கானவை. இவை தவிர mix breed எனப்படுகிற கலப்பின நாய்களும் உண்டு.
நீங்கள் நாய் வளர்க்க ஆசைப்படுவதன் காரணம் என்ன? வெறும் அன்புக்காக மட்டுமே வளர்க்க ஆசைப்படுகிறீர்கள், அந்தஸ்தின் வெளிப்பாடாக இல்லை என்றால் நாட்டு நாய்களையும் கலப்பின நாய்களையும் வளர்க்கலாம். ‘அன்பாகவும் இருக்கவேண்டும்… அந்தஸ்தின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்’ என்றால் லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர் வளர்க்கலாம். இரண்டும் அன்புக்குக் கட்டுப்பட்டவை. யாரையும் கடிக்காதவை. மகா புத்திசாலி! காவல் துறையினர் வளர்க்கிற ஜெர்மன் ஷெப்பர்டும் லேப்ரடாரும் அதி புத்திசாலி. சொல்லிக் கொடுப்பதை சட்டெனப் புரிந்து கொள்ளக்கூடியவை. மோப்ப சக்தி அதிகம்.