எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் வேர்க்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மேலும் குழந்தைகள் இச்சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
Peanut Chutney Recipe
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 1/3 கப்
சின்ன வெங்காயம் – 14
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பற்கள்
புளி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவை, வேர்க்கடலை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி கலந்தால், வேர்க்கடலை சட்னி ரெடி!!!