காளான் மொமோஸ் என்பது கொழுக்கட்டை போன்றது. பொதுவாக கொழுக்கட்டையின் உள்ளே இனிப்புக்களை வைத்து தான் செய்வோம். ஆனால் மொமோஸ் என்பது வடகிழங்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இதனை ஸ்நாக்ஸ் போன்றோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம்.
மேலும் மொமோஸ் உள்ளே வைக்கும் பொருட்கள் அனைத்தும் நமது விருப்பமே. இங்கு காளான் பயன்படுத்தி செய்யக்கூடிய மொமோஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா – 2 கப்
காளான் – 6 (பொடியாக நறுக்கியது)
காலிஃப்ளவர் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் – 2 (நறுக்கியது)
பூண்டு – 5-6 (தட்டியது)
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து, துணியில் போட்டு 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு பௌலில் காளான், காலிஃப்ளவர், உப்பு, கேரட் மற்றும் பூண்டு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கையை நீரில் நனைத்து பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, அதனை தட்டையாக தட்டி, அதன் நடுவே காய்கறி கலவையை கொஞ்சம் வைத்து, படத்தில் காட்டிய வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, அதில் செய்து வைத்துள்ள மொமோக்களை வைத்து, அந்த தட்டை இட்லி பாத்திரத்தினுள் இட்டு 8-10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான காளான் மொமோஸ் ரெடி!!!