ஊதா முட்டைகோஸ் அல்லது சிவப்பு முட்டைகோஸ் என்பது உலகம் முழுவதும் அதன் ஊட்டச்சத்துக்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு காய் ஆகும். இதுவும் ப்ரோக்கோலி, காலே, காலிப்ளவர் குடும்பத்தை சார்ந்ததுதான்.
சாதாரண முட்டைகோஸை விட இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், குறைந்தளவு கலோரிகளும் இருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.
இந்த சிவப்பு காயில் அதிகளவு நார்சத்துக்கள், தரமான கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம், அவசியமான வைட்டமின்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முட்டைக்கோஸின் இருண்ட நிறமி அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகளைக் குறிக்கிறது, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. இந்த காயை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செரிமானத்திற்கு சிறந்தது
ஊதா முட்டைக்கோஸில் கலோரிகளில் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது, இதனால் செரிமான செயல்பாட்டில் இது திறம்பட செயல்படுகிறது. நன்கு சமைக்கப்பட்ட முட்டைகோஸை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. செரிமான செயல்பாட்டை மெதுவாக செய்வதன் மூலம் இது உங்களை நீண்ட நேரம் திருப்தியாக இருக்க உதவுகிறது. இது உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது
சிவப்பு முட்டைக்கோஸை தொடர்ச்சியாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கும். இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது, இது இதயத்தில் இருக்கும் இரத்தத்தின் அளவை சீரமைக்கிறது. மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காய் உங்களின் இதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
சருமத்திற்கு நல்லது
அதிக ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த இந்த காயானது உங்கள் சருமத்திற்கு பல் நன்மைகளை வழங்கக்கூடியது. இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை நீண்ட காலமாக இளமையாக வைத்திருக்க உதவுகின்றன, மேலும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைத் தடுக்கின்றன. மேலும் இது வைட்டமின் சி ஆல் நிறைந்தது. வைட்டமின் சி சருமத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இந்த முட்டைகோஸில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-ன் அளவை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது. அதனால்தான் நோயின்றி வாழ்வதற்கு மருத்துவர்கள் இந்த காயை பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றுவதன் மூலம் இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது
இந்த முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். மேலும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் கே, பொட்டாசியம், மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
பச்சையாகவே சாப்பிடலாம்
இதனை நீங்கள் சமைக்காமல் பச்சையாகவே சாலட் வடிவில் சாப்பிடலாம். இந்த சாலட்டை செய்ய உங்களுக்கு தேவை சில அடிப்படை பொருட்கள் மட்டுமே. நறுக்கிய முட்டைகோஸ், ப்ரோக்கோலி, தக்காளி, அவகேடா போன்றவற்றை இதனுடன் சேர்த்து சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்து இதனை சாப்பிடலாம். இல்லயெனில் பச்சை முட்டைகோஸை சமைப்பதைப் போலவே இதனையும் நீங்கள் அனைத்து விதத்திலும் சமைத்து உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.