என்னென்ன தேவை?
பலாப்பழ சுளைகள் – 2 கப்,
வெல்லம் – 2 கப்,
அரிசி மாவு – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்,
நெய் – சிறிது,
துருவிய தேங்காய் – 2 கப்,
தண்ணீர் – 2 கப்,
வாழை இலை.
எப்படிச் செய்வது?
மேல் மாவிற்கு…
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அரிசி மாவைத் தூவிக் கிளறி விடவும். ஒட்டாத பதம் வந்ததும், கீழே இறக்கி ஒரு சொட்டு எண்ணெய் விட்டுப் பிசைந்து ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
பூரணத்திற்கு…
பலாப்பழச் சுளைகளைத் துண்டு துண்டாக வெட்டி, இட்லிப் பானையில் வைத்து வேகவிட்டு, மிக்சியில் போட்டு மசித்துக் கொள்ளவும். தண்ணீர்விட்டு அரைக்கக்கூடாது. கூழ் போலாகி விடும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துப் பின் வடிகட்டிக் கொதிக்க விடவும். பொங்கு பதம் வந்தவுடன் மசித்த பலாப்பழத் துண்டு, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். ஒன்று சேர்த்து உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி வைக்கவும்.
இப்போது இலையை 10" சதுரங்களாக வெட்டி, மேேல சிறிதளவு நெய் தடவி, சிறிதளவு மாவை அதில் மெல்லியதாக தட்டவும். பின் ரெடியாக வைத்துள்ள பூரணத்தை அதில் வைத்து இலையுடன் சேர்த்து மடித்து மூடி, ஆவியில் வைத்து வேகவிடவும். சுடச்சுடப் பரிமாறவும்.