குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் அவர்கள் தங்கள் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாயில் வைப்பார்கள். எனவே வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாலேயே, அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம். இங்கு குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது, பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் மனதில் கொண்டு நடந்தால், குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
போட்டோ எடுங்கள்
உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது. எனவே உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்தால், அத்தருணத்தில் மறக்காமல் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.
பொருட்களை கீழே வைக்காதீர்கள்
குழந்தை தவழ ஆரம்பித்துவிட்டால், வீட்டில் எந்த ஒரு பொருளையும் குழந்தையின் கைக்கு எட்டும்படி வைக்காதீர்கள். முக்கியமாக கூர்மையான பொருட்களை எப்போதும் மேலே வைத்துவிடுங்கள். இதனால் எந்த ஒரு அசம்பாவீதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
படுக்கையில் குழந்தையை தனியாக விடாதீர்கள்
தவழும் குழந்தையை எப்போதும் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தனியாக விடக்கூடாது. அப்படிவிட்டால், எவ்வளவு தான் தலையணையை அவர்களைச் சுற்றி வைத்தாலும், அவர்கள் அதனை தாண்டி விழுந்துவிடுவார்கள்.
பேபி காட் பாதுகாப்பாக உள்ளதா என்று பாருங்கள்
உங்கள் தவழும் செல்ல குட்டியை பேபி காட்டில் போட்டு செல்லும் போது கவனமாக இருக்கவும். ஏனெனில் குழந்தை தவழ்கிறது என்றால், அவர்களால் எதையாவது பிடித்து நிற்கும் வலிமையும் இருக்கும். எனவே அவர்கள் பேபி காட்டில் இருந்து வெளியே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்
உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல வண்ணமயமான பொருளை அவர்களின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அவர்களை எடுக்கச் சொல்லுங்கள். இதனால் அவர்கள் குதூகலத்துடன் சந்தோஷமாக இருப்பார்கள்.
வீட்டுத் தரையை சுத்தப்படுத்துங்கள்
உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால், தினமும் தவறாமல் வீட்டுத் தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த ஒரு நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் இருக்கும்.
நடக்க உதவுங்கள்
குழந்தை தவழ ஆரம்பித்தால், அவர்களை நடக்க வைக்க உதவுங்கள். இதனால் அவர்கள் விரைவில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.