பள்ளிக்குப் போகிற குழந்தை வீட்டுப் பாடங்களை எழுதச் சொன்னால் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லித் தட்டிக் கழிக்கிறதா?
இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் குழந்தை கவனிக்கப்பட வேண்டும். அது `கற்றலில் குறைபாடு’ பிரச்னையாகவும் இருக்கலாம். இதைக் கண்டறிந்து, முறையான பயிற்சி அளித்தால் குறைபாட்டைச் சரிசெய்துவிடலாம். இதேபோல ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுகளையும் சில பயிற்சிகளின் வழியாகச் சரிசெய்யலாம்.
“கற்றல் குறைபாடு, கவனம் செலுத்துவதில் பிரச்னை, தனித்த உலகத்தில் இருப்பது உள்ளிட்ட அறிகுறிகளோடு இருக்கும்(ADHD/ Hyperactive/Autism) குழந்தைகளுக்கான அலோபதி, சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் என்ன? இதுபோன்ற குழந்தைகளுக்கு இப்போது நிறைய தெரபி சென்டர்கள் பயிற்சி அளிக்கின்றன. இது எவ்வளவு தூரம் பயனளிக்கிறது? அவர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் பயிற்சி தருகிறார்கள். இது உண்மையிலேயே பலன் தரக்கூடியதா?” என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் சிதம்பரம் என்பவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
DoubtOfCommonMan
“பொதுவாக, குழந்தையின் அதீதமாகச் செயல்படும் தன்மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உகந்த, நரம்பு மற்றும் சுரப்பியல் தொடர்பான மாத்திரைகள் வழங்கப்படும். இப்படியான குழந்தைகளுக்கு, பிஹேவியரல் மட்டுமன்றி கூடுதலாக மூளை வளர்ச்சி சார்ந்த சில பிரச்னைகளும் இருக்கக்கூடும். ஆகவே இவர்களுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் நிச்சயம் எடுக்க வேண்டும். அதன் முடிவில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்
நரம்பியல் நிபுணர்
இந்தக் குழந்தைகளுக்கு அட்டென்ஷன் குறைபாடு இருக்கும் வாய்ப்பு அதிகம். அந்த வகைக் குறைபாடுகளுக்கு, தெரபிகள்தான் சிறந்த தீர்வு. இந்தக் குழந்தைகளுக்கென `குழந்தைகள் வளர்ச்சிக்கான மருத்துவர் (Developmental Pediatrician)’ என்ற பிரத்யேக மருத்துவர் இருக்கிறார். அவரை அணுகுவதன் மூலமாக, நடத்தை தொடர்பான தெரபிகளை குழந்தைகள் சிறப்பான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பிரச்னையுள்ள குழந்தைகள் அனைவரும், ஒன்றுபோலச் செயல்பட மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித நடத்தைப் பிரச்னை இருக்குமென்பதால், அது சரியாவதற்கான கால அவகாசமும் வேறுபடும். வருடக்கணக்கில்கூட சிகிச்சைகளும், தெரபிகளும் தேவைப்படலாம் என்பதால், இவர்களை கவனித்துக்கொள்பவர்கள் அதிக பொறுமையுடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்”
`சித்த மருத்துவத்தில், கற்றல் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு என்ன மாதிரியான தீர்வுகள் இருக்கின்றன?’ என்பது குறித்து சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்.
“கற்றல் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைக்கு, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலுள்ள குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின்படி வயிற்றில் ஏற்படும் ஆமம் (அஜீரணக்கோளாறு)தான் ஆட்டிஸத்துக்கான முதல் காரணம். செரிமானப் பகுதியைச் சரிசெய்யக்கூடிய பஞ்சதீபாக்கினி சூரணம் பரிந்துரைப்போம். பிரம்மி நெய், வாளுலுவைப் போன்ற நரம்பை வலுவாக்கும் மருந்துகளும் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இதன் மூலம் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து குழந்தையை மீட்கலாம். ஆனால், இந்த மருந்துகளை நீண்ட நாள்களுக்கு உட்கொள்ள வேண்டியிருக்கும்.
சித்த மருத்துவர் விக்ரம்குமார்
மனம் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்க குழந்தையைக் குழு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். செல்போன், வீடியோ கேம்ஸிலேயே மூழ்கிவிடுகின்றனர். மனதை அமைதிப்படுத்தும், ஊக்கப்படுத்தும் விளையாட்டுகளை விளையாட அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். பள்ளி முடித்துவிட்டு வந்தவுடன் பக்கத்து வீட்டுக் குழந்தையோடு விளையாட அனுமதிக்க வேண்டும். நான்கு வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் முறையைச் செயல்படுத்த வேண்டும். இந்தக் குளியல் மனதை அமைதிப்படுத்தும். தப்பணம், தாரை உள்ளிட்ட சித்த மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்” என்றார் மருத்துவர் விக்ரம்குமார்.
DoubtOfCommonMan
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
`கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தெரபிகள் பலனளிக்கின்றனவா?’ என்று குழந்தைகள் நல இயன்முறை நிபுணர் ராதா பாலசந்தரிடம் கேட்டோம்.
“கற்றல் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகளின் சதவிகிதம் அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டுமானால் அவர்களுக்குத் தொடர்ந்து தெரபி அளிக்க வேண்டும்.
குழந்தைக்குப் பேச்சு தாமதம், குக்கர் விசில் சத்தம் கேட்டால்கூட காதை மூடிக்கொள்கிறது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் தெரபி சென்டர்களை அணுகுகிறார்கள். அப்போது `உங்கள் குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கலாம்’ என்று சொல்லும்போது, கலக்கமடைகிறார்கள். `என்னுடைய குழந்தை நல்லாத்தானே இருக்கு…’ என்று சொல்லி ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.
குழந்தைகள் நல இயன்முறை மருத்துவர் ராதா பாலசந்தர்
முதலில் பெற்றோர் ஏடிஹெச்டி, ஆட்டிஸம் போன்றவை எல்லாம் நோயல்ல, குறைபாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நோயாக இருந்தால்தான் அதைக் குணப்படுத்த முடியுமா, முடியாதா என்று யோசிக்க வேண்டும். இது குறைபாடு என்பதால் பெற்றோர் தங்களின் குழந்தையின் நடவடிக்கைகளை (கண் பார்த்துப் பேசாதது, ஓரிடத்தில் உட்காராமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது, பேச்சு தாமதம் போன்றவை) குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அறிகுறிகளிலிருந்து அவர்களுக்கு என்ன வகையான தெரபி அளிக்க வேண்டும் என்பதை தெரபிஸ்ட் முடிவு செய்வார். அதேபோல என்ன வகையான குறைபாடு ஒரு குழந்தையிடம் இருக்கிறதோ அதற்கேற்றவாறு தெரபி தருவதற்கான காலமும் நீளும். சில குறைபாடுகளுக்கு ஒரு வருடம் தேவைப்படும். சில குறைபாடுகளுக்கு வருடங்கள்கூடத் தேவைப்படலாம். என்றாலும், தொடர்ந்து பயிற்சி அளிக்கும்போது அந்தக் குறைபாடுகளை சரிசெய்யலாம்”