நள்ளிரவு 1 மணி… கீச்சு கீச்சு என ஓடும் மின்விசிறி சத்தம், தூரத்தில் குரைக்கும் நாய், வாட்ச் மேனின் விசில் சத்தம் என எங்கெங்கோ கேட்கும் சத்தங்கள் உங்கள் காதில் துல்லியமாக கேட்கும்.
படுத்துக்கொண்டால் கண்கள் மூடாது, இமைகள் ஒட்டாது. புறண்டு படுப்பீர்கள், திரும்பி படுப்பீர்கள், போனை ஓரமாக வைப்பீர்கள், அதை மீண்டும் எடுப்பீர்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் பேஸ்புக்கை ஸ்க்கிரால் செய்துகொண்டே நேரத்தை கழிப்பீர்கள்.
இவையெல்லாம் தூக்கமின்மைக்கான அறிகுறி தான். தூக்கமில்லாமல் தவித்ததுண்டா?.
ஆரோக்கியமான வாழ்வுக்கு தூக்கம் மிகவும் அவசியம். தூங்குவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதுடன், மூளைக்கு தேவையான ஓய்வும் கிடைக்கிறது.
காலையில் நீங்கள் எழுந்து எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்கள் என்பது இரவில் நீங்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
தூக்கம் அவசியம் தான் ஆனால் அது எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது.
உண்மையில் எவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்?
அது அவரவரின் தேவையைப் பொறுத்ததே. செய்யும் வேலை, உடல் உழைப்பு, வாழும் தட்ப வெட்ப சூழல், வயது போன்றவற்றைப் பொறுத்தது.
உடல் உழைப்பு அதிகம் செய்பவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களும் அதிக நேரம் தூங்குகிறார்கள். குழந்தை தினமும் 13 மணி நேரம் தூங்கிறது. குழந்தையின் தாத்தாவும் அதே அளவு தூங்குகிறார்.
இது தவிர உடல் அமைப்பு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இவ்வளவு மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்று யாருக்கும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அது சாத்தியமில்லாதது.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலரோ 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்பார்கள்.
7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் ஆபத்து, 10 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் நம்மை பல நேரம் குழப்புகிறது.
ஒவ்வொருவருக்கும் 7 மணி நேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும் என நாம் கேட்டுப் பழகிவிட்டோம். அது நமது மனதில் புகுத்தப்பட்டுள்ளது. குறைவாக தூங்கினால் இதய நோய்கள் வரும், நரம்பு பிரச்னைகள் வரும் என விதவிதமான பயமுறுத்துகிறார்கள்.
ஆனால் சிலர் மிகவும் குறைவான நேரமே தூங்குகிறார்கள். நீங்களும் இப்படிப்பட்டவராக இருந்தால் அது குறித்து கவலைப்படத்தேவையில்லை.
அனைவருக்கும் ஒரே மாதிரியான தூக்கம் தேவைப்படாது. சிலர் தினமும் 4 முதல் 6 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ‘ஷார்ட் ஸ்லீப்பர்ஸ்’ (Short Sleepers) என்ற அழைக்கிறார்கள்.
குறைந்த நேரம் தூங்கினாலும் அவர்களுக்குத் தேவையான ஓய்வு கிடைத்துவிடுமாம். இப்படிப்பட்டவர்களுக்கு 5 மணி நேர உறக்கமே போதுமானது. அதனால் தான் நள்ளிரவு படுத்தாலும் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்.
ஆனால் இது போன்றவர்கள் மிகக்குறைவாகத் தான் இருக்கிறார்களாம்.
நீங்களும் ஷார்ட் ஸ்லீப்பரா?
ஷார்ட் ஸ்லீப்பர்களுக்கு சில பொதுவான தன்மைகள் உண்டு.
1.மற்றவர்களைவிட மிகவும் பாஸிட்டிவாக இருப்பார்கள். நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம்.
2.இரவில் வெகு நேரத்திற்குப் பிறகு தூங்கினாலும் காலையில் வேகமாக எழுந்துவிடவார்கள். விடுமுறை தினம், வேலை இருக்கிறதோ, இல்லையோ இவர்கள் சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.
3.இந்த ஷார்ட் ஸ்லீப்பிங் மரபணு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் ஒரு ஷார்ட் ஸ்லீப்பர்கள் வீட்டில் மற்றொரு ஷார்ட் ஸ்லீப்பர்கள் இருப்பார்கள்.
அப்பா, அண்ணன், தங்கை என குறைந்த நேரம் தூங்கக் கூடிய மற்றொரு நபர் அவர்களின் குடும்பத்தில் இருப்பார்கள்.
4.எவ்வளவு குறைவாக தூங்கினாலும் காலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
5.ஒருவேலை தேவைக்கும் அதிகமாக தூங்கினால் மிகவும் சோர்வாக உணர்வார்கள்.
6.சுறுசுறுப்பாக இருக்க இவர்களுக்கு காப்பி, டீ போன்ற பானங்கள் தேவைப்படாது.
தூக்கமின்மை!
ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு தூக்கம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.
மாறிவரும் காலச் சூழலில், ஸ்மார்ட் போனில் நேரத்தை செலவழித்து தூங்காமல் இருப்பது அதிகரித்து வருகிறது.
இரவெல்லாம் பேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருந்து தூக்கத்தை இழக்கிறார்கள். அதேவேலையில், அலுவலக பணி, படிப்பு ஆகியவற்றால் இரவில் தூக்கம் என்பது மாறிவருகிறது.
தூக்கம் வராமல் சிரமப்படுவது தூக்கமின்மை. புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்க வரவில்லை என்றால் தூக்கமின்மை.
ஆனால் நான் 7 மணி நேரம்கூட தூங்கவில்லை என்று புலம்புவது தேவையற்றது.
வராத தூக்கத்தை வரவழைக்க முட்டிமோதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். சோர்வை ஏற்படுத்தும்.
உங்கள் உடலுக்கு தேவையான அளவு ஓய்வு எடுத்தாலே போதுமானது. அதனால் 5 மணி நேரமோ, 6 மணி நேரமோ தூங்கினாலும் பிரச்னை இல்லை.
உஷார்- வித்தியாசம் உண்டு!
நன்றாக தூக்கம் வருகிறது ஆனால் தூங்காமல் உட்கார்ந்து படம் பார்ப்பது, பேஸ்புக் பார்ப்பது என வீம்பாக இருப்பது தவறு.
என்னால் சில மணி நேரம் தூங்கிவிட்டு அடுத்த நாள் வேலை செய்ய முடியும் என்று கூறுவது தவறானது.
அது பின்னால் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
முழித்து இருக்க முடியும் என்பதற்காக தூங்காமல் இருக்கக்கூடாது. இரவு தூங்கும் நேரம் வந்ததும் செல்போனை மூட்டை கட்டி வைத்துவிட்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
போதிய தூக்கம் இல்லாமல் போனால் அடிக்கடி கோபம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவீர்கள்.
வேலையை ஒழங்காகக் செய்ய முடியாமல் போகும், சோர்வு ஏற்படும். பல்வேறு பிரச்னைகள் எழும். அதனால் தேவையான அளவு உறங்குவது அவசியம்.