திப்பிலி
பொதுவான தகவல்கள் : திப்பிலி (Piper Longum) என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது.
மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.
கொடி வகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப் பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அளவு உள்ளதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும்.
பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ நீளம் உள்ள சரத்தில் நெருக்கமாகவும் இருக்கும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தோன்றும் காய்கள் தான் மருத்துவரீதியாகப் பயன்படுகின்றன. திப்பிலியின் காய்களில் வெற்றிலைப் போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனையும் இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும்.
திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு.
இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. திப்பிலிக் காய்களில் பைப்பரின் (piperine) மற்றும் லாங்குமின் (Longumin) மருந்து வேதிப் பொருட்கள் உள்ளன.
தவிர ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உலர்ந்த காய்களில் 0.27 சதம் லாங்குமின் வேதிப்பொருள் உள்ளது. இந்த மருந்துப் பொருள் உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், 3 வருடங்களுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி முதலிய நோய்களுக்குப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
திப்பிலியின் இதர மருத்துவப் பயன்கள்:
* திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.
* திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.
* திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
* திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
* திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
* திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
* திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
* திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.
* திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
* திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
* திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாயு குணமாகும்.
* திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
* சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேளையும் கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
* குழந்தைகளின் குடல் நோயில் புழு அகற்றுவியாக திப்பிலி செயல்படுகிறது.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலிப் பொடியை கலந்து கொடுப்பதால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.
* திப்பிலி லேகியம் சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம், பாண்டு இவைகளை குணப்படுத்தும்.
* திப்பிலி மூலமாக முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம் போகும்.
* குங்கிலியம் சேர்த்த திப்பிலிக்காரம் முடக்குவாத நோயை துரிதமாக குணப்படுத்த வல்லது.
* திப்பிலி விழுதை நெய்யில் பக்குவம் செய்து இந்துப்பூ கலந்து உட்கொள்ளச் செய்தால் இருமல் தணியும்.
* மிளகுடன் கலந்த திப்பிலிப் பொடி மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப் பொடியாக செயல்படுகிறது.
* யானைத் திப்பிலி, அதிசாரம், இழுப்பு, தொண்டை நோய், கிருமி நோய் ஆகியவற்றை போக்கும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.