நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி தன்மை உண்டு. எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளும்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் அறிவாற்றல் பெருகும்.
இரும்பு சத்து : இந்த ஊட்டச்சத்துகளில் இரும்பு சத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் அதன் அதிகரிப்புக்கும் இரும்பு சத்து மிகவும் உதவுகிறது. தசைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது. உடல் முழுதும் ஆக்சிஜென் ஓட்டத்திற்கு துணை செய்கிறது. ரத்தசோகையை குறைக்கிறது. நாட்பட்ட நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. கர்ப்பகாலத்தில் இரும்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு மிகவும் அவசியம்.
இரும்பு சத்து அதிக உள்ள உணவு என்று உலகம் முழுதும் கருதப்படுவது சிவப்பு இறைச்சியாகும். இந்த சிவப்பு இறைச்சியை விட அதிகம் இரும்பு சத்து நமது தாவர உணவுகளில் சிலவற்றில் உள்ளது. சைவ உணவை விரும்பி எடுத்துக் கொள்கிறவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் இணைத்துக் கொள்ளும்போது இரும்பு சத்து அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையும் அதன் பயனையும் இப்போது பார்க்கலாம்.
கீரை: இரும்பு சத்தின் ஆதாரமாக கீரை பார்க்கப்படுகிறது. தினமும் கீரை சாப்பிடுவதால் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கிறது. 100கிராம் கீரையில் 2.7மிகி அளவு இரும்பு சத்து உள்ளது.
ப்ரோக்கோலி : பச்சை காய்கறிகளில் ப்ரோக்கோலியில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரும்பு சத்தை தவிர அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் கே , மெக்னீசியம், வைட்டமின் சி போன்றவை ப்ரோக்கோலியில் அதிகம் உள்ளன. ப்ரோக்கோலியை உங்கள் தினசரி உணவில் தவறாமல் பயன்படுத்தலாம்.
பயறு வகைகள்: எல்லா வகையான பயறுகளும் இரும்பு சத்து அதிகம் உள்ளவையாகும் . 100கிராம் பயறில் 3.3 மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. இவற்றில் நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகம் இருப்பதால், உடல் ஆரோக்கியத்தின் ஒட்டு மொத்த நலனும் பயறு உணவை உண்பதால் நமக்கு கிடைக்கிறது.
பரட்டை கீரை:(காலே) நகரங்களில் இந்த கீரையை அதிகம் காண முடிவதில்லை. கீரை வியாபாரிகளிடம் சொல்லி, இந்த கீரையை வாங்கி சமைத்து சாப்பிடுவதால் உடல் வலிமை அதிகரிக்கிறது. சூப் அல்லது சாலட் செய்து சாப்பிட்டு வருவதால் இரும்பு சத்து அதிகம் சேருகிறது.100 கிராம் பரட்டை கீரையில் 1.5 மி கி அளவு இரும்பு சத்து உள்ளது.
எள்ளு: நாம் அதிகமாக எள்ளை நமது உணவில் எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் அதில் இரும்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். 100 கிராம் எள்ளில் 14.6மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. ஆகவே உங்கள் தினசரி சாலட் அல்லது மற்ற உணவுகளில் எள்ளை சேர்த்துக் கொள்வது நல்லது. மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆகவே இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உடலை பெறலாம்.