31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
doctors 1
மருத்துவ குறிப்பு

மருத்துவரிடம் எப்படி உரையாடுவது?

சின்னதாய் ஏற்படும் வயிற்று வலியாகட்டும், நீண்ட நாளாய் வதைக்கும் தலைவலியாகட்டும் ஒரு வித பயத்துடனும், குழப்பத்துடனும் மருத்துவர் அறையில் காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் நேரமோ சில மணித்துளிகள்தான். அந்த குறைந்த நேரத்தில் தெளிவாய் நம் துன்பங்களைச் சொல்லி பரிந்துரைகளைப் பெறுவது என்பது சமீபத்தில், மருத்துவர்-நோயாளி என இருபக்கமும் சற்று சிரமமாயும் சிக்கலாயும் ஆகிவருகின்றது. ஒரு நோயாளியாய், எப்படி சிறந்த முறையில் இச்சிக்கலை களைய முடியும்?

* யார் எனக்கான மருத்துவர் என்பதை தேர்ந்தெடுப்பதில் முதல் கவனம் தேவை. நமக்கான குடும்ப மருத்துவர் ஒருவரை நாம் அடையாளம் கண்டு இருக்க வேண்டும். நம் வீட்டுக்கு அருகிலேயே, எளிதில் அணுகக் கூடிய, நட்போடு பழகக் கூடிய அம்மருத்துவர் அறம் சார்ந்து பணியாற்றுபவரா என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுக்காரரையே பரிச்சயமில்லாத நகர்ப்புற நெரிசலில், இப்படியான மருத்துவரை இனங்காண்பது பெருநகரத்தில் சற்று சிரமம் என்றாலும் சிறு நகரங்களில் கிராமங்களில் இன்றளவும் சாத்தியமே. நல்ல தரமான பொருளுக்கான கடை, நல்ல தரமான உணவகம் இவற்றைத் தேடி வைத்திருப்பது போல, நம்பிக்கையான மருத்துவரை தேடி குடும்ப மருத்துவராய் வைத்திருப்பதும் கூட இக்காலத்தின் கட்டாயம்.

இன்றைய சூழலில் நமக்கு டாக்டரை தெரிந்திருப்பதை விட, டாக்டருக்கு நம்மைத் தெரிந்திருப்பதுதான் நல்லது.. “வாங்க ராமசாமி! பையன் எப்படி படிக்கின்றான்? பொண்ணுக்கு பிரசவம் ஆயிடுச்சா?”ன்னு கேட்கிற மருத்துவர் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு எந்த நோயுமே அநேகமாக ரொம்ப நாட்கள் இருக்காது எனலாம்.

* மருத்துவருக்காகக் காத்திருக்கும் பொழுதுகளில், சில நேரங்களில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் தாமதமாகும்போது, “உள்ளிருக்கும் நபருக்கு சற்று சிக்கலான இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படும் நோயாக இருக்கக் கூடும்; அதனால்தான் தாமதமாகின்றது” என்பதை புரிந்து கொள்ளவேண்டும். வரவேற்பாளரிடம் சண்டை கட்டி, ஒரு குய்யோ முய்யோ மனநிலையில் உள் செல்லும் போது, நம் நோயின் தெளிவான விவரங்களை அளிப்பதற்கு மறந்துவிடவும் பெரிதும் வாய்ப்புண்டு.

* மருத்துவர் அறைக்குள், மனைவி, மக்கள் என ஜந்து பந்துக்களோடு கூட்டமாகச் செல்லாதீர்கள். நோயாளியுடன் ஒரு உதவியாளர் இருந்தால் போதும்.

* நோயாளிதான் நோயை விளக்கமாய் பேச வேண்டுமே ஒழிய உடன் வந்தவர் விளக்க முற்படுவது கூடாது. பேச முடியாத சூழலிலோ, குழந்தைகளை அழைத்து வரும்போதோ, உடனிருப்பவர் பேசலாம். “அவளுக்கு/அவருக்கு ஒண்ணும் தெரியாது, நான் சொல்றேன்” என ஆரம்பிப்பது, பல நேரத்தில் நோய் விளக்கத்தை விட, நோயாளி மீதான உங்கள் அன்பை அல்லது ஆக்ரோஷத்தை இணைத்து வரும் பேச்சாகத்தான் இருக்கும்.

விவரத்தை சரியாக அது மருத்துவரிடம் தெரிவிக்காது. புனைவுகளும், ஏற்ற இறக்கங்களும் நோயின் தன்மையில் ஏறிவிடும் ஆபத்து அதிகம். நோயாளிதான் பேச வேண்டும். பிறர் குறுக்கே பேசுவது, பின் இணைப்புகள், இடைச்செருகல்களை அந்த உரையாடலின்போது தவிர்க்க வேண்டும்.

* தீவிரமான நோயைப் பற்றிய சிந்தனையில் மருத்துவர் நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், “எவன்டி உன்னைப் பெத்தான்; கையில் கிடைச்சால் செத்தான்” என்கிற காலர் டியூனோடு செல்பேசி அழைப்பதும், அதை அங்கேயே எடுத்து “தோ! இப்போ வந்திருவேன்… அப்புறம் செக் பாஸாயிடுச்சா” எனவும் பேசுவது ஆகக் கொடியது. செல்போனை 10-15 நிமிடம் அணைத்து வைத்துவிட்டு மருத்துவர் அறைக்குள் நுழையுங்கள்.

* உள்ளே நுழைந்து மருத்துவரிடம் முதலில் உங்கள் அவஸ்தைகளைப் பற்றி உங்களின் இயல்பான மொழியில் பேசுங்கள்; “எனக்கு இரிடபுள் பவல் சிண்ட்ரோம்” என நீங்கள் அனுமானித்து வைத்திருக்கும் நோய்க்கணிப்பை பேசாதீர்கள்; “வயிற்று வலிக்கிறது; பேதியாகின்றது; சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உந்துதல் வருகின்றது. வீட்டை விட்டு கிளம்புகையில் மலம் கழித்துவிட்டுச் செல்லலாமோ எனத் தோன்றுகிறது” என உங்களை சங்கடப்படுத்தும் விஷயங்களை கூடக் குறைய சொல்லாமல் அப்படியே (‘பயங்கரமா’ போன்ற வார்த்தைகளை தேவையில்லாமல் பயன்படுத்தாமல்) சொல்லுங்கள்..

* நோயைப்பற்றி மனதில் ஓர் எண்ண ஓட்டம் இருக்கலாமே தவிர, குறிப்பெடுத்து, மளிகைக் கடைக்குப் போவது போல், நுணுக்கமான எழுத்தில் எழுதிவருவது அவ்வளவாய் பயன் தராது. திடகாத்திரமாய் இப்போது இருந்து கொண்டு 1987ல் முதுகு பிடித்தது; 89ல் கால்பெருவிரலில் வலி.

92ல் பாருங்க…ஒருமுறை பயங்கர பேதி வந்துச்சு” என, நீங்கள் அளிக்கும் விளக்கம், உங்க விளக்க வரிசையில், 2017 எப்போது வருமோ என மருத்துவரை கலவரப்படுத்தக் கூடும். மருத்துவர் நோயைக் கணிக்கும் விதத்தில், முதலில் கேட்க விரும்புவது, தற்போதைய பிரச்னைகள், அதன்பின் தொடர்புடைய முந்தைய பிரச்னைகள், அதற்கு அடுத்தபடியாக தொடர்புடைய குடும்ப வரலாறு, பழக்கவழக்கங்கள் இவற்றைத்தான்.

* நீங்கள் அவதியுறும் விஷயங்களை உள்ளது உள்ளபடி சொல்வதுதான் சிறப்பு. அயர்ன் மாத்திரை சாப்பிட்டதால் எனக்கு மூணு நாளா மலச்சிக்கல், பஸ்ஸில் வந்தப்ப வந்த கால்வீக்கம், தூக்கம் இல்லாததால் தலைவலி என நீங்கள் அனுமானிக்கும் காரணங்களோடு பட்டியலிட வேண்டாம். ‘எனக்கு மலச்சிக்கல், கால்வீக்கம் தலைவலி, இத்தனை நாட்களாக’ என சொல்லி நிறுத்துங்கள். உங்கள் நோயின் குறிகுணம் கொண்டு, மருத்துவர் தனித்தனியாய் விசாரிக்கையில் தொடர்புடைய விஷயங்களை பேசலாம்.

* சட்டைப்பையில் எடுத்துவரும் குறிப்புகள் மருத்துவரின் நோய்க்கணிப்புக்கான வழிமுறையை சற்று சிக்கலாக்கவோ /சிதைக்கவோ கூடும். “மறந்துவிடக்கூடாது; மருத்துவர் இந்த பழைய சிக்கலையும் மனதில் கொள்ள வேண்டும்” என நீங்கள் முனைப்பெடுத்தும் குறிப்புகளில், பல நேரங்களில், பயமும், பரபரப்பும், பதட்டமும், சுயபச்சாதாபமும் நிரம்பி வழியுமே தவிர, நோய் விளக்கம் வரிசைக்கிரமமாய் இராது.

“அது எப்படி சார்? மறந்துவிடக் கூடாது என்றுதானே” என நீங்கள் கேட்கலாம். மறந்து விடக் கூடிய சிறிய சிக்கல்கள் நோயோடு பெரிதாய் தொடர்பிராது. கடும் துன்பம் தரக் கூடியதென்றால், நோயாளி மறக்க முடியாது. ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்கு செல்வது போல மருத்துவர் அறைக்கு நுழைய வேண்டாம்; உங்கள் நண்பரை பார்க்கச் செல்லும் மனநிலையில் செல்லுங்கள்.

* “எதுக்கும் இருக்கட்டும்” என முன்ஜாக்கிரதையாய் ‘மாஸ்டர் செக்கப்’ செய்துகொண்டு வரும் உங்கள் மாஸ்டர் பிளான், பல நேரத்தில் குழப்பத்தை தேவையற்ற செலவீனத்தை விளைவிக்கத்தான் செய்யும். இப்போது இத்தகைய மருத்துவ சோதனைகளின் தொகுப்பெல்லாம், நோயறிதல் கம்பெனிகளின் வணிக ‘மாஸ்டர் பிளானாக’ மாறிவருவது உங்களுக்குத் தெரியாது.

* மருத்துவர் ஒரு சில சோதனைகளை செய்யச் சொன்னால், உங்கள் வீட்டு அருகில் உள்ள தர நிர்ணயம் சிறப்பாக வைத்துள்ள சோதனைச் சாலையில் செய்துகொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் சாலையில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.

* மருத்துவர் எழுதி வைத்திருப்பதை ‘கூகுள் குலசாமி’யிடம் போட்டு பார்ப்பது; டாக்டர் சொன்ன வார்த்தைகளை இணையத்தில் அலசி ஆராய்வது, அனேகமாக உங்களை உள்நோயாளி ஆக்கி, நம்பிக்கையின்மையை விதைத்து கலவரப்படுத்துமே ஒழிய தெளிவைத் தராது. நோயைப் பற்றி விசாலமான அறிவை இணையத்தில் படிப்பதில் தவறில்லை.

அந்தச் செய்திகள் அறிவை விசாலப்படுத்துமா கலவரப்படுத்துமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இணையம் பல நேரத்தில் கழிப்பறைச் சுவர் போல் இப்போது பயன்படுத்தப்படுவதை புரிந்துகொள்ளவேண்டும்.

* “வாட்ஸ் அப்பில் இப்படி வந்திருக்கே?” என மருத்துவரிடம் கேட்பதை தவிர்க்கலாம். மருத்துவருக்கே அது பல நேரத்தில் வயிற்றுவலியை தரக் கூடும். “தமிழனாய் இருந்தால் சேர் செய்யுங்கள்; மற்றவர் டேபிள்- டீப்பாய் செய்யுங்கள்” என்ற அறைகூவலுடன் பல தவறான செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருவதும், அதை அச்சுப்பிசகாமல் தன் தொடர்பில் உள்ள அத்தனை ‘அய்யோபாவ’த்துக்கும் ஃபார்வார்டு செய்யும் மனவியாதி பிடித்தவர்கள் நம் சமூகத்தில் இப்போது ஏராளம். அவர்களால், குழப்பமும் பதட்டமும் வருவதைத் தவிர பெரிதாய் பயன் வருவதில்லை.

* அவசர காலங்களைத் தவிர மருத்துவரை அலைபேசியில் அழைப்பதைத் தவிர்க்கலாம். இரவு 11 மணிக்கு போன் செய்து, “இந்த வெண்டைக்காயை ஊறவைச்சு சாப்பிட்டால், சுகர் குறையும்னு சொல்றாங்களே, பச்சடியா செய்யக் கூடாதா சார்?” என உங்கள் அன்பான(?) விசாரிப்பு, அவர் ஆயுட்காலத்தைக் கூட குறைக்கக் கூடும். தொடர்ச்சியான உங்கள் அலைகூவலுக்குப் பயந்து அவர் அலைபேசியை மவுன மொழிக்கு மாற்ற, உங்களுடைய அல்லது இன்னொருவருடைய அவசரத்தை அவர் அறியாமல் போக வாய்ப்பு தரும்.

அவருக்கும் கணவர்/மனைவி, குழந்தைகள் மற்றும் உங்களைப் போல எண்ணற்ற நோயாளிகள் இருப்பார்கள். அவர்களுக்கான நேரம் என்பதும் கட்டாயம் தேவைப்படும். உங்கள் மருத்துவரின் அலைபேசி எண் என்பது, நீங்கள் அதீத அவசரத்திற்கு அழைக்கும் ஆம்புலன்ஸ் எண்ணைப் பயன்படுத்துவதற்கு, முந்தைய அவசரத் தொடர்பு எண் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* குடும்ப மருத்துவர் பரிந்துரைப்படி, சிறப்பு சிகிச்சை தரும் மருத்துவரை, அவரது பரிந்துரை கடிதத்துடன் பார்க்கச் செல்வது நலம். தொலைக்காட்சி விளம்பரம், ஊடக விளம்பரங்களைவிட உங்கள் குடும்ப மருத்துவர் சரியான சிறப்பு மருத்துவரை வழிகாட்டுவார்.

* மருத்துவரின் மருத்துவ பரிந்துரை கடிதங்களை வரிசைக்கிரமமாக எப்போதும் பாதுகாப்பாக கோப்பில் வைப்பது பின் நாட்களில் பெரிதும் உதவும். மருத்துவரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொருவர் வெளியில் கூடுதல் வலியுடன் காத்திருக்கின்றார் என்பதை மனதில் கொண்டு உரையாடுங்கள். புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் தெளிவாக மருத்துவரிடம் உரையாடுவது கூட சிகிச்சையின் முதல்படிதான். doctors

Related posts

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன?

nathan

பப்பாளி

nathan

உங்க உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? கரைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

மூலிகைகளின் அற்புதங்கள்

nathan

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

nathan