எஸ்.எம்.எஸ்., டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற இணைய பயன்பாடுகள் அதிகமாக அதிகமாக எழுத்துக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
வாட்ஸ்-அப் மொழியின் பின்விளைவு
ஒரு வார்த்தையை ஒரு எழுத்தில் அடக்குவதுதான் இப்போதைய பேஷன். எஸ்.எம்.எஸ்., டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற இணைய பயன்பாடுகள் அதிகமாக அதிகமாக எழுத்துக்களின் எண்ணிக்கை குறைகிறது. you என்ற சொல்லை ‘u’ என்று ஆக்கிவிட்டார்கள். இதை எழுதுபவர்களும், படிப்பவர்களும் சுலபமாக புரிந்து கொள்கிறார்கள்.
அதுவும் அவர்கள் இணையத்தில் இருக்கும் பட்சத்தில், அதைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும் பட்சத்தில், இதனை எஸ்.எம்.எஸ். மொழி, வாட்ஸ்-அப் மொழி என்கிறார்கள். இப்படி தொடர்ந்து எழுதும் மாணவர்கள் பழக்க தோஷத்தில் தேர்வுகளிலும் அதேபோல் எழுதத் தொடங்கி விடுகிறார்கள். இதுதான் இப்போதைய ஆசிரியர்கள் பிரச்சினை.
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது. காலந்தோறும் மொழிக்கு புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய சவால் இந்த வாட்ஸ்-அப் மொழி. இன்றைய மாணவர்கள் புத்தகங்களைவிட செல்போன்களிடம்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதிலும் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் இளைய தலைமுறையினர் பைத்தியமாக இருக்கிறார்கள். அது தேர்விலும் தெரிகிறது. இதனை ஆசிரியர்கள் கண்டிக்கவே செய்கிறார்கள்.
ஆங்கிலம் ஒரு அழகான மொழி. ஆங்கிலத்தின் சிறப்பே அதன் வார்த்தைகளின் வளம்தான். ஒரே உச்சரிப்பு கொண்ட வார்த்தையில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றி அமைத்தால் அது வேறு பொருள் தந்துவிடும். ஆங்கிலத்தின் இந்த தன்மையை தேர்வு வரை கொண்டு செல்லும்போது இந்த தவறு ஆவணப்படுத்தப்பட்டு, அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.
அறிவியல் தேர்வுகளில் இத்தகைய வாட்ஸ்-அப் மொழியை பயன்படுத்தினால் கூட பரவாயில்லை. ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் கூட இதை சாதாரணமாக தேர்வுத் தாளில் எழுதுகிறார்கள். சோம்பேறித்தனம், அறியாமை என்பதைக்காட்டிலும் ஒரு மொழியின் மீது ஆளுமை இல்லாமல் போவதுதான் இதில் ஏற்படும் பெரிய பின்னடைவு.
இப்படி வார்த்தைகளையும், வாக்கியங்களையும் உடைத்துச் சிதைத்து எழுதிப் பழகுவதால் மாணவர்களால் சரியான தொடர் வாக்கியங்களை அமைக்க முடிவதில்லை. இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே சுருக்கெழுத்து முறையை விட்டு, வாட்ஸ்-அப் போன்ற இணைய பயன்பாட்டிலும் முழுமையாகவே எழுத வேண்டும் என்று பயிற்சியை மேற்கொள்வதே நல்ல மொழி ஆளுமையைத் தரும்.